தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் பெம்பி மண்டலம் லோதர்யா தாண்டா பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரெட்டி நாயக்- சுகுணா. இவர்களுக்கு அஸ்வினி (19), மஞ்சுளா (17) என்ற இரு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தம்பதியினரின் மகள்கள் இருவரும் ஹைதராபாத்தில் நடைபெறும் F-SET நுழைவுத் தேர்வு எழுத சென்றுள்ளனர்.
தேர்வு முடிந்த பின் இருவரும் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கார் ஒரு கல்லின் மீது எதிர்பாராத விதமாக திடீரென மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் சகோதரிகள் இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.
இது குறித்த அறிந்த குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும் தந்தை ரெட்டி நாயக் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது நிறுவனம் மோசடியில் சிக்கியதால் அந்நாட்டிலேயே அவர் கூலி வேலை செய்து வருகின்றார்.
இதனால் மகள்களின் இறப்புக்கு கூட இந்தியா வர முடியாத நிலையில் இருந்த தந்தையிடம் பி.ஆர்.எஸ் தலைவர் கே.டி. ராமராவ் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மகள்களின் இறுதி சடங்குக்கு கூட வர முடியாத நிலையை குறித்து தந்தை ரெட்டி நாயக் மனம் வருந்துவதாகவும் பி.ஆர்.எஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து , ரெட்டி நாயக் இந்தியா திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச் சடங்கை பி.ஆர்.எஸ் பொறுப்பாளர் ஜான்சன் நாயக் நேரில் சென்று கவனித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தேர்வு முடிந்து வீடு திரும்பும் வழியில் நடைபெற்ற விபத்தால் சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.