பாகிஸ்தானுக்கு நிதியுதவியைத் தடை செய்யுங்க - நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்..!
Newstm Tamil May 06, 2025 01:48 AM

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக முப்படைத் தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது எல்லையில் இந்திய ராணுவம் சுதந்திரமாக செயல்பட அவர் அனுமதியளித்தார். இதனால் எல்லையில் பாகிஸ்தான் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது.


பரபரப்பான இந்தச் சூழலில் ஆசிய வளர்ச்சி வங்கி தலைவரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்தார். அப்போது பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்திவைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியானது.


பிலிப்பைன்ஸின் மாண்டலுயாங் நகரை மையமாக கொண்டு செயல்படும் ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசியாவில் 42 இடங்களில் கிளைகளை நடத்தி வருகிறது. இதுதவிர வாஷிங்டன், ஃபிராங்க்ஃபர்ட், டோக்யோ, சிட்னி என பல்வேறு நகரங்களில் இதன் பசிபிக் மற்றும் பிரதிநிதித்துவ அலுவலகங்கள் உள்ளன.

68 உறுப்பு நாடுகள் ஆசிய வளர்ச்சி வங்கியில் பங்கு வகிக்கின்றன. அதில் 60 நாடுகளில் இருந்து 3 ஆயிரம் பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். உறுப்பு நாடுகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவி செய்கிறது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்திவைக்குமாறு வங்கித் தலைவரிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.