இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு, மின்னஞ்சல் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த ஷமிக்கு, “ராஜ்புத் சிந்தார்” என்ற மெயில் ஐடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மிரட்டல் வந்ததாக அவரது சகோதரர் ஹசீப் தெரிவித்தார். இந்த தகவலின் அடிப்படையில், அம்ரோஹா சைபர் செல் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஷமி தற்போது ஐபிஎல் தொடரில் பிஸியாக இருப்பதால், அவரது மின்னஞ்சல்களை தற்காலிகமாக சகோதரர் ஹசீப் பார்த்து வருகிறார். மே 4 ஆம் தேதி மின்னஞ்சல் ஐடியை திறந்த போது, “ரூ.1 கோடி பணம் அனுப்பாவிட்டால், எதிர்வினை மோசமாக இருக்கும்” என்று கூறி வந்த மிரட்டல் மெயிலை கண்டதாக ஹசீப் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த மிரட்டலுக்கு பின்னால் பண மோசடி நோக்கமோ அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து அம்ரோஹா காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் ஆனந்த் கூறுகையில், “முகமது ஷமியின் மின்னஞ்சலுக்கு வந்த மிரட்டல் தொடர்பாக சைபர் செல் வழக்கு பதிவு செய்துள்ளது. மின்னஞ்சல் மூலம் 1 கோடி ரூபாய் பறிக்க முயற்சித்தது மிகப்பெரிய குற்றம். இது தொடர்பாக டிஜிட்டல் தடயங்களைப் பயன்படுத்தி மெயில் அனுப்பிய நபர் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.