சபரிமலை கோயிலுக்கு வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
Dhinasari Tamil May 06, 2025 07:48 AM

#featured_image %name%

#image_title

பாரத குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இம்மாதம் வைகாசி மாத பூஜை காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கேரளா வரும் அவர், மே 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் அப்போது சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய வரலாம் என்று தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குடியரசுத்தலைவரின் வருகையை ஒட்டி, சபரிமலை தேவசம் போர்டும், அம்மாநில போலீசாரும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலையில் குடியரசுத்தலைவர் வரும் நாட்களில் கடுமையான பாதுகாப்பும், கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சபரிமலையில் மே 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனத்திற்காக சபரிமலை வருவதை ஒட்டி ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் வருவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடக்கும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடக்கும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள், மாதாந்திர பூஜை நடக்கும் போது செல்வார்கள். இதனால் தற்போது மாதாந்திர பூஜை காலத்திலும் சபரிமலையில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது.

இந்தநிலையில் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்கிறார். அவர் வருகிற 18 அல்லது 19-ந்தேதியில் சபரிமலைக்கு செல்லலாம் என்று தெரிகிறது. ஆனால் இரு நாட்களில் எந்த நாளில் அவர் சபரிமலைக்கு செல்கிறார் என்ற உறுதியான தகவல் தெரிவிக்கப் படவில்லை.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக கேரளா வரும் திரௌபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நிலக்கல் செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக பம்பைக்கு செல்கிறார். பின்பு பம்பையில் இருந்து நடை பயணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வார் என தெரிகிறது.

குடியரசுத்தலைவரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. குடியரசுத் தலைவர் பயணிக்கக் கூடிய இடம் மற்றும் சன்னிதானத்தில் தங்கக்கூடிய தேவசம் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களை பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு நிலக்கல்லில் இருந்து சாலக்காயம் வரை யிலும், சாலக்காயத்தில் இருந்து பம்பை திரிவேணி வரையிலும் சாலை பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பம்பை, மலைப்பாதை, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன என தேவஸ்தான அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.