சீனாவில் படகு கவிழ்ந்து விபத்து ... கடலில் தத்தளித்த 84 சுற்றுலா பயணிகள்... 10 பேர் உயிரிழப்பு!
Dinamaalai May 06, 2025 02:48 AM

 

சீனாவில் திடீரென சூறை காற்றுடன் மழை பெய்ததால் சுற்றுலா  பயணிகள் சென்றுக் கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீனாவில் தற்போது மே தின விடுமுறை காலம் என்பதால் நேற்று யாங்சே நதியின் கிளைநதியான வூ நதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இருந்தனர். அவர்கள் சுற்றுலா சவாரிக்கு சென்றபோது, திடீரென சூறை காற்றுடன் மழை பெய்தது. இந்த திடீர் வானிலை மாற்றம் படகுகளை கவிழ்த்தது.

இந்த விபத்தில் 84 பேர் நீரில் விழுந்தனர். சிலர் நீந்தி கரைசேர்ந்த நிலையில், மீதமுள்ள பயணிகளை மீட்க 500க்கு மேற்பட்ட மீட்புப் படையினர் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 74 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

சம்பவத்திற்கு உடனடியாகக் கண்டனம் தெரிவித்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், காணாமல் போனவரை கண்டுபிடிக்க அனைத்துவிதமான முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும், காயமடைந்தோருக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.