உஜ்ஜைனியின் புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலில் திங்கள்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்து பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயிலின் வசதி மைய நுழைவாயில் எண் 1 அருகே அமைந்துள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
முதற்கட்ட விசாரணையின்படி, இன்வெர்ட்டர் பேட்டரியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வெடிப்புக்குப் பின்னர் அருகிலிருந்த ஜெனரேட்டரும் தீப்பற்றி எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை வேகமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பாதுகாப்பு கருதி சிறிது நேரம் பக்தர்கள் நுழைவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் தீயை முழுமையாக அணைத்த பிறகு வழிபாட்டு நடவடிக்கைகள் வழக்கம்போல தொடரப்பட்டது.
கலெக்டர் ரோஷன் சிங் மற்றும் எஸ்பி பிரதீப் சர்மா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் இணைந்து தீ விபத்தின் முழுமையான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.