ராஜஸ்தானின் தீத்வானா மாவட்டத்தில் உள்ள நாவா பகுதியில் உள்ள சௌசாலா கிராமத்தில் பாக்சந்த் என்ற 30 வயது நபர், தனது மனைவி அர்ச்சனாவை தூங்கிக் கொண்டிருந்தபோது கோடரியால் வெட்டி கொன்றுள்ளார். அவர் இக்குற்றத்தை குடிபோதையில் செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்துக்குப் பிறகு அவர் தப்பி ஓடிய நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர்.
பாக்சந்த் மற்றும் அர்ச்சனா இருவரும் 2020ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டிருந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. திருமணத்துக்குப் பிறகு சில வருடங்களாகவே பாக்சந்த் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்துள்ளார். குறிப்பாக, தனது தம்பியுடன் அர்ச்சனாவுக்கு தொடர்பு இருக்கலாம் என அவர் நம்பியதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று, அர்ச்சனா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, பாக்சந்த் வீட்டிற்குள் நுழைந்து, பலமுறை கோடரியால் தாக்கி கொலை செய்தார். அருகில் இருந்தவர்கள் வீட்டில் இருந்து வந்த அலறல் சத்தத்தைக் கேட்டதும் ஓடி வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.