14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு : பாஜக எம்.எல்.ஏ-விற்கு 7 ஆண்டு சிறை!
Newstm Tamil May 07, 2025 09:48 AM

தெலுங்கானாவின் அனந்தபூர் மாவட்டத்தில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, கடந்த 14 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது. 3,400 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு 219 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி ஆந்திர முதலமைச்சராக இருந்த காலத்தில், 68.5 ஹெக்டேர் மற்றும் 39.5 ஹெக்டேர் இரும்புத் தாது சுரங்க குத்தகைகளை வழங்குவதில் அதிகாரிகள் ஜனார்த்த ரெட்டி சகோதரர்களின் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதன் மூலம் அரசுக்கு 884 கோடி இழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டி, ஓஎம்சி நிர்வாக இயக்குநர் பி.வி. ஸ்ரீனிவாச ரெட்டி, சுரங்கத் துறையின் முன்னாள் இயக்குநர் வி.டி. ராஜகோபால், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிருபானந்தம், தெலுங்கானா அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, 2022-ல் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ஒய். ஸ்ரீலட்சுமி, சுரங்கத் துறையின் உதவி இயக்குநர் ஆர். லிங்க ரெட்டி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். அவர்கள் மீது ஐபிசி பிரிவுகள் 120பி (குற்றச் சதி), 420 (மோசடி), 409 (குற்ற நம்பிக்கை மீறல்), 468 & 471 (மோசடி) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 13(2) & 13(1)(d) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ, ஜனார்த்தன ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ நீதிமன்றம் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி மற்றும் முன்னாள் அதிகாரி பி. கிருபானந்தம் ஆகியோரை சிபிஐ வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிபதி டி. ரகு ராம் விடுவித்தார். ஓபுலாபுரம் சுரங்க நிறுவன சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஜனார்த்தன ரெட்டி மற்றும் மூன்று பேர் குற்றவாளிகள் என்று ஹைதராபாத் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ஜனார்த்தன ரெட்டியின் மைத்துனரும் OMC-யின் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் அப்போதைய சுரங்கம் மற்றும் புவியியல் உதவி இயக்குநரான VD ராஜகோபால், ரெட்டியின் தனி உதவியாளரான மெஹாபுஸ் அலி கான் ஆகியோரை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்தது. சுரங்க நிறுவனத்தின் எம்.டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஏ1 ஆகவும் ஜனார்த்தன ரெட்டி இரண்டாவது குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றம் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்திற்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்தது. தீர்ப்பிற்குப் பிறகு சிபிஐ அதிகாரிகள், ஜனார்த்தன ரெட்டி மற்றும் மற்றவர்களைக் காவலில் எடுத்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.