''பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக'' இந்தியா நள்ளிரவில் அறிவித்தது.
ஆனால், இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதே சமயம், இந்திய அரசு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பொதுமக்களில் யாரும் இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் இல்லை என கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா சிந்து நதி ஒப்பந்தம் ரத்து உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மறுபுறம் பஹல்காம் தாக்குதலில் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் மறுத்துவருகிறது.
இந்நிலையில்தான், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம் என்றும் 9 இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன என்றும் இந்தியா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1.40 மணியளவில் அறிவித்தது. இந்த தாக்குதலுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்ட காணொளியில் கடுமையான வெடிப்புச் சத்தங்களை கேட்க முடிகிறது.
AFP செய்தி முகமை வெளியிட்ட காணொளியில் தாக்குதலின்போது பயங்கர சப்தம் கேட்பதையும், வானில் இருந்தபடி ஏவுகணை வருவதையும் பார்க்க முடிகிறது. ஆனால், பிபிசியால் இந்த காணொளிகளை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
AP செய்தி முகமை வெளியிட்டுள்ள காணொளியில், சம்பவ இடத்தில் இருந்தவர் அங்கே நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார்.
பாகிஸ்தான் ராணுவ தளங்களின் மீது இலக்கு வைக்கப்படவில்லை எனவும் மிகவும் கவனத்துடன் கட்டுப்பாட்டுடன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது.
இந்தியாவின் இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முசாஃப்ஃபராபாத், பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட கோட்லி மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் ஆகிய பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் , ஜியோ தொலைக்காட்சியிடம் பேசும்போது, இந்தியா பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தாக்கியதாகவும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்ததாக இந்தியா கூறுவது தவறு என்றும் கூறியுள்ளார்.
முசாஃப்ஃபராபாத்தில் நடந்த தாக்குதலுக்கு பிந்தைய காணொளியை ஏபி செய்தி முகமை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியதாக ட்வீட் ஒன்றில் கூறியுள்ளார். இந்தியாவுக்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எதிரி நாடு மிகவும் கோழைத்தனமாக பாகிஸ்தானின் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர் இந்தியாவின் இந்தத் தாக்குதலை "போர்ச் செயல்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முழு விவரம் காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு