#featured_image %name%
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது பாரத ராணுவத்தின் விமானப்படை துல்லிய தாக்குதலை மேற்கொண்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஒன்பது இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் பயங்கரவாத முகாம்களை மட்டுமே மையமாக வைத்து நடத்தப்பட்டது என்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீதோ பாகிஸ்தான் பொதுமக்கள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் பாரத ராணுவம் தெளிவாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பாரத ராணுவத்தின் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருந்த 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் உட்புறப் பகுதியில் இந்த துல்லிய தாக்குதல் விமானப்படையின் மூலம் நடத்தப்பட்டுள்ளது. கோட்லி, பஹ்வல்பூர், முசாபர்பாத், பர்னாலா உள்பட மொத்தம் 9 பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழித்துள்ளது பாரத ராணுவம். இந்தத் தாக்குதல் மூலம் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாக பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பயங்கரவாத முகாம்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களும் அழிக்கப் பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாரதத்தின் இந்த நடவடிக்கைக்கு சூட்டப்பட்ட பெயர் பலர் கவனத்தையும் ஈர்த்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பாரதம் முழுவதும் பரவலாக மக்கள் தங்கள் ஆதரவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இது பாரத ராணுவம் மேற்கொண்ட மிகச் சரியான பதிலடி நடவடிக்கை என்று தெரிவித்துள்ளனர்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் ஏன்?பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’. திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் ‘சிந்தூர்’ என அழைக்கப்படும். பஹல்காம் தாக்குதலில் பல பெண்கள கண் எதிரில் அவரவர் கணவன் சுட்டுக்கொல்லப்பட்டு தங்கள் நெற்றி வகிட்டுக் குங்குமத்தை இழந்தனர்.
எனவே பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே, பாரத ராணுவத்தின் இந்த பதிலடி நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என பெயர் வைத்துள்ளனர்.
முக்கியமாக, இந்த நடவடிக்கை நடந்த நேரம், நடந்த விதம் உலகை ஆச்சரியப் படுத்தியுள்ளது. போர்க் கால ஒத்திகை என பாகிஸ்தானை நம்ப வைத்து, முந்திய நாள் நள்ளிரவிலேயே அதிரடியாக தாக்குதலை தொடங்கி அசத்தியது பாரத ராணுவம்.
பஹல்காம் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்க திட்டமிட்டு இன்று நாடு தழுவிய போர்க் கால ஒத்திகையை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் போர்க் கால ஒத்திகைக்கு முன்பே இந்திய ராணுவம் மே.7 இன்று நள்ளிரவில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது. இது எவருமே எதிர்பார்க்காத ஒன்று.
பொதுவாக போர் ஒத்திகை நடத்தப்பட்டால் அதன்பின் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அல்லது சில நாட்கள் கழித்தே போர் தொடங்கும். அதுபோன்றுதான் இன்று நடைபெறும் போர் ஒத்திகைக்குப் பின்னரே இந்தியா போரைத் தொடங்கும் என பாகிஸ்தான் நம்பியிருந்த வேளையில், பாரத ராணுவம் மிகவும் சாதுர்யமாக பாகிஸ்தானை ஏமாற்றி இரவோடு இரவாக பாகிஸ்தான் , மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் துல்லியத் தாக்குதலாக, விமான மூலம் குண்டுகளை வீசியுள்ளது. தங்கள் ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது நடந்த இந்தத் தாக்குதலால் பாகிஸ்தான நிலை குலைந்து போயுள்ளது.
இந்திய ராணுவத்தின் தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் ஷப்பாஸ் ஷெரீப் உறுதிபடுத்தினார். இதையடுத்து லாகூர், சியல்கோட் விமான நிலையங்களை அடுத்த 48 மணி நேரத்திற்கு பாகிஸ்தான் மூடியது. இதை அடுத்து, பாகிஸ்தானில் லாகூர், சியல்கோட் மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
பெண்களுக்கான நீதி நிலைநாட்டப்பட்டதுஇதனிடையே, இந்த பதிலடி சம்பவத்தில் நீதி நிலைநாட்டப் பட்டுள்ளதாக பாரத ராணுவம் தன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.அதில் பயங்கரவாதிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவநிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை! நீதி நிலைநாட்டப் பட்டுள்ளது ; ஜெய்ஹிந்த் என பதிவிடப்பட்டிருந்தது.
தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், வெளியுலகுக்கும் நாட்டுக்கும் இந்தச் செய்தியைச் சொல்வதற்காக, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஊடகத்தினரை அழைத்து, விளக்கம் அளித்தார். அவர் ”பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் ” என கடுமையாக சாடினார்.
இன்று காலை 10.30க்கு மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் காண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். இதில் மத்திய அரசின் தரப்பு விளக்கம் மட்டுமே அளிக்கப்பட்டது. செய்தியாளர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை.
இதில் விக்ரம் மிஸ்ரி கூறியபோது, “பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது. காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுப்பதே பயங்கரவாதிகளின் நோக்கம். காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டு பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி வருகிறது. பயங்கரவாத தாக்குதலை நிறுத்த வேண்டியது அவசியம்.
பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான். பயங்கரவாத முகாம்களை அழிக்க நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தமாக 25 நிமிடங்கள் தாக்குதல் நடத்தப்பட்டது.
மத மோதலைத் தூண்டும் வகையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தப்பட்டது; பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தாத பாகிஸ்தான் அரசு அவர்களை ஆதரிப்பது உலகத்துக்குத் தெரியும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மொத்தம் 9 இடங்களில் 21 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் 4 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்; அதற்கு பதிலடியாக பயங்கரவாதிகள் பயிற்சி எடுத்த சர்ஜால் சாய்ல்கோட் முகாம் அழிக்கப்பட்டது. பதான்கோட் தாக்குதலுக்குத் திட்டம் வகுக்கப்பட்ட மெஹ்மூனா ஜோயா முகாம் அழிக்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கான பயிற்சி கொடுத்த மார்கஸ் டைபா முகாமும் தகர்க்கப்பட்டது. அஜ்மல் கசாப் பயிற்சி எடுத்தது இங்கு தான். முசாபராபாத்தில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பயிற்சி மையம் குறிவைத்து அழிக்கப்பட்டது.” என்று தெரிவித்தார்.
மகளிர் சக்தியின் குறியீடுஇதன் பின்னர், செய்தியாளர் சந்திப்புக்கு வந்திருந்த பெண் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி, விங் காண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இந்தத் தாக்குதல் குறித்துக் கூறிய போது, “21 பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் கண்டறியப்பட்டது. இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை. பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மும்பை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டனர்.
பெண்களின் மீதான உளவியல் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை அழிக்கும் ‛ஆபரேஷன் சிந்துார்’ தாக்குதலில் பாரத ராணுவம் மற்றும் விமானப்படை பெண் வீராங்கனைகளும் ஈடுபட்டுள்ளனர். இதனை வெளிப்படுத்தவே பெண் அதிகாரிகளை வைத்து விளக்கம் கொடுத்தது பாரத ராணுவம். இன்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் அதற்கு அடையாளமாக முன்னிறுத்தப் பட்டனர்.
குறிப்பாக, பஹல்காம் தாக்குதலில் ஹிந்து ஆண்களைக் குறி வைத்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று, ஹிந்து பெண்களை தங்கள் சிந்தூரை (குங்குமத்தை) இழக்க வைத்தனர். ஹிந்து மத வழக்கப்படி பெண்கள் நெற்றியில் திலகம் (சிந்துார்) இட்டுக்கொள்வது வழக்கம். பயங்கரவாதிகளின் கொடூரச் செயலால் இந்த ஹிந்துப் பெண்கள் திலகத்தை இழந்தனர். இந்தக் கொடுமைக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ‛ஆபரேஷன் சிந்துார்’ என இந்தத் தாக்குதலுக்குப் பெயரிடப்பட்டது.
இது தொடர்பில் மத்திய அரசு வெளியிட்ட ஆபரேஷன் சிந்தூர் என்ற வார்த்தையின் ஆங்கில எழுத்துகளில் ‘O’ என்ற எழுத்து குங்கும டப்பா வடிவத்திலும், அந்த டப்பாவிலிருந்து குங்குமம் சிதறிக் கிடப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக முதலில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த பாரதம், சிந்து நதியில் பாகிஸ்தானுக்கு தண்ணீர் விடுவதை நிறுத்தியது. இதைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. Operation Sind Or Operation Sindoor என இந்த இரண்டு நடவடிக்கைகளையும் மையமாக வைத்து கருத்துகள் பகிரப்பட்டன.
முக்கியமாக, பேடித்தனமாக பெண்களை விதவைகளாக்கிய பயங்கரவாதிகள் மீது அச்சம் என்பதை அறியாத எங்கள் நாட்டு பெண்கள் தாக்குவார்கள் என்பதை வெளிக்காட்டும் வகையில் பாரதம் செயல்பட்டுள்ளது. இதன் குறியீடே, பெண்களை வைத்தே தாக்குதல் நடந்தது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வீராங்கனைகள்!இவர்களில் ராணுவ கர்னல் சோபியா குரோஷி குஜராத்தைச் சேர்ந்தவர். முதுகலைப் பட்டம் பெற்றவர். ராணுவ குடும்பப் பின்னணி கொண்டவர். தற்போது கர்னல் அதிகாரியாக உள்ளார். அவரின் தாத்தா பிரிட்டிஷ் கால இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். தந்தையும் ராணுவத்தில் சேவை புரிந்துள்ளார். ராணுவ குடும்பம் என்பதால் குழந்தைப் பருவத்தில் இருந்தே ராணுவக் காற்றை சுவாசித்தவர். 1999ம் ஆண்டு ராணுவத்தில் அதிகாரியாகச் சேர்ந்தவர். படிப்படியாக முன்னேறி, ராணுவ தகவல் தொழில்நுட்ப படைப்பிரிவின் கர்னலாக இருக்கிறார்.
இவர், 2006 காங்கோவில் ஐ.நா., அமைதி காக்கும் பணியில் செயலாற்றினார். பஞ்சாப் எல்லையில் பராக்ராம் ஆபரேஷனில் இடம்பெற்றார். 2016ல் சர்வதேச ராணுவ பயிற்சியின் போது உலகம் முழுவதும் மொத்தம் 18 படைப்பிரிவுகள் பங்கேற்றன. அதில் இந்தியாவின் படைப்பிரிவை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி இவர்.
இன்னொருவர், விங் கமாண்டர் வியோமிகா சிங். இவர், 2004ல் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். பின்னர் பைலட்டாக பயிற்சி பெற்றார். ஹெலிகாப்டர்களை இயக்குவதில் வல்லமை பெற்றார். மீட்புப் பணிகள், பேரிடர் காலங்கள், மற்ற முக்கிய ஆபரேஷன்களில் ஹெலிகாட்பர்களை திறமையாக இயக்கி கவனம் பெற்றார். 2017ல் விங் கமாண்டராக பதவி உயர்வு பெற்றார். விமானப் படையில் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்பதன் அடையாளமாக இருப்பவர் இவர்.
வியோமிகா என்றால் காற்று என்று பொருள்படுமாம். அதன்படி, வாயு வேகத்தில் செயலாற்றி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
News First Appeared in