இந்தியாவிற்கு தகுந்த பதிலடி பாகிஸ்தான் கொடுக்கும் என்பதை திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகிறேன் - பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர்..!
Newstm Tamil May 07, 2025 09:48 AM

ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீர் தாக்குதல் நடத்தியது.

கோட்லி, பஹ்வால்பூர், முஸாஃபர்பாத் உள்ளிட்ட பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து, எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி கூறியிருப்பதாவது, சமீபத்தில், எதிரியான இந்தியா மூன்று இடங்களில் கோழைத்தனமான வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

இந்த கோழைத்தனமான மற்றும் வெட்கக்கேடான தாக்குதல் இந்தியாவின் வான்வெளியில் இருந்து நடத்தப்பட்டது. அவர்கள் பாகிஸ்தானின் வான்வெளிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் இதற்கு பதிலடி கொடுக்கும் என்பதை திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்திருப்பதாவது, தந்திரமான எதிரி பாகிஸ்தானில் ஐந்து இடங்களில் கோழைத்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தியா திணித்த இந்த போர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு. அதற்கு தகுந்த பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த நாடும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு துணை நிற்கிறது. பாகிஸ்தானுக்கும், நம் ராணுவத்துக்கும் எதிரியை எப்படி கையாள்வது என்று தெரியும். எதிரியின் தீய நோக்கங்களை ஒருபோதும் வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.