#BREAKING : துவங்கியது ஆபரேசன் ‛சிந்தூர்'...பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதலை தொடங்கியது இந்திய ராணுவம்!
Newstm Tamil May 07, 2025 09:48 AM

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.


இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடு முழுவதும் இன்று போர் ஒத்திகை நடத்தும்படி, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அவசர உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி, பக்வால்பூர், முஷாராபாத் ஆகிய மூன்று இடங்களில் இன்று (மே.07) நள்ளிரவு நம் ராணுவம் ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாதிகள் முகாமினை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடவடிக்கையை துவக்கியது.கோட்லி, பஹ்வல்பூர் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரைச் சுற்றியுள்ள மலைகளுக்கு அருகிலுள்ள பகுதியில் நள்ளிரவுக்குப் பிறகு பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


பஹல்காம் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டது ‛ ஜெய்ஹிந்த்' என ராணுவ எக்ஸ்தளத்தில் பதிவேற்றியுள்ளது. மிகுந்த நிதானத்துடன் இலக்குகளை குறித்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.