OPERATION SINDOOR-ரில் பயன்படுத்திய தற்கொலை ட்ரோன்கள் பெங்களூருவில் தயாரிப்பு!!
Newstm Tamil May 09, 2025 01:48 PM

 “ஆபரேஷன் சிந்துர்” நடவடிக்கையில் தற்கொலை ட்ரோன்கள் முக்கிய பங்கு வகித்தன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீதான இந்த பதிலடித் தாக்குதல்களில் அதிநவீன தொழில்நுட்ப ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

தற்கொலை ட்ரோன்கள் அல்லது லாய்டரிங் வெடிபொருட்கள் என்பது ஒரு வகையான தானியங்கி ஆயுதம். இவை சாதாரண ட்ரோன்களைப் போலவே பறக்கின்றன, ஆனால் இலக்கைக் கண்டறிந்தவுடன் அதன் மீது நேரடியாகத் தாக்கி வெடிக்கின்றன. அதனால்தான் இவை “காமிகேஸ் ட்ரோன்கள் ” என்றும் அழைக்கப்படுகின்றன. பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு இந்த ட்ரோன்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டன.

புதன்கிழமை ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் பெங்களூருவில் தயாரிக்கப்பட்டவை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கு பெங்களூருவில் உள்ள தொழில்துறை பகுதியில் இந்த தற்கொலை ட்ரோன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆல்பா டிசைன் மற்றும் இஸ்ரேலின் எல்பிட் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் இணைந்து ட்ரோன் தயாரிப்பை மேற்கொள்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களின் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது.

இந்திய ராணுவம் சிறப்பு 100 ட்ரோன்களை வாங்க ஆர்டர் செய்தது. 100 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய இந்த டிரோன்கள் 5 முதல் 10 கிலோ எடையைத் தாங்கும் திறன் கொண்டவை. குறைந்த உயரத்தில் இயங்கும் இந்த ட்ரோன்களின் சத்தம் மிகவும் குறைவு. எனவே இவற்றின் நகர்வு ரகசியமாக இருக்கும்.

இந்த ட்ரோன்கள் குறித்து பதிலளிக்க ஆல்பா டிசைனின் சிஎம்டி, கர்னல் (ஓய்வு) எச்.எஸ். சங்கர் மறுத்துவிட்டார். இதுபோன்ற கேள்விகளுக்கு அரசு அல்லது அரசு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். இதுபோன்ற கேள்விகளுக்கு தான் பதிலளிப்பது சரியல்ல என்று அவர் கூறினார்.

இலக்கைக் கண்டறிந்து தாக்கும் திறன், கண்காணிப்பு அமைப்பு உள்ளது. முதலில் வானில் சுற்றி இலக்குகளைக் கண்டறியும். மனித தலையீடு இல்லாமல் செயல்படும் தானியங்கி அமைப்பு உள்ளது. அதிக துல்லியத்தன்மை கொண்ட இந்த ட்ரோன்கள் மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கும் திறன் கொண்டவை. ஒரே இயந்திரத்தில் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் தொழில்நுட்பம் உள்ளது.

கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்று ராணுவ உத்தியின் மையமாக ட்ரோன்கள் செயல்படுகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.