இந்திய சிறையில் இருந்து தப்பிக்க முயன்று சுரங்கப்பாதையில் சிக்கிய மசூத் அசார்
BBC Tamil May 09, 2025 09:48 PM
Getty Images மசூத் அசார்

ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார், முதன்முதலில் ஜனவரி 29, 1994 அன்று வங்கதேச விமானத்தில் டாக்காவிலிருந்து டெல்லிக்கு வந்தார். அவரிடம் போர்த்துகீசிய பாஸ்போர்ட் இருந்தது.

இந்திரா காந்தி விமான நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் அவரைப் பார்த்து, "நீங்கள் பார்க்க ஒரு போர்த்துகீசியர் போல இல்லை" என்றார்.

மசூத் உடனே, "நான் குஜராத்தி பூர்வீகம் கொண்டவன்" என்றார். அதைக் கேட்ட பிறகு, அவரை மீண்டும் ஏறெடுத்துப் பார்க்காமல், பாஸ்போர்ட்டில் சீல் வைத்தார் அந்த அதிகாரி.

இந்தியா வந்த சில நாட்களுக்குள், ஸ்ரீநகரின் தெருக்களில் உலாவத் தொடங்கினார் மசூத் அசார். அங்கு, இளைஞர்களைத் தூண்டிவிட உரைகள் நிகழ்த்துவது, காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டபோது மத்தியஸ்தம் செய்வது போன்ற செயல்களைச் செய்து வந்தார்.

அவருக்கு இன்னொரு முக்கியமான பணியும் இருந்தது. காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஈர்ப்பது.

ஒருமுறை அவர் அனந்த்நாக்கில், ஒரு ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ராணுவ வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். உடனடியாக, அவர் ஆட்டோவில் இருந்து குதித்து ஓடத் தொடங்கினார். ஆனால், ராணுவ வீரர்கள் அவர்களைப் பிடித்தனர்.

"இந்திய அரசாங்கத்திற்கு என்னை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க அதிகாரம் இல்லை", இவ்வாறு மசூத் அசார் அடிக்கடி கூறி வந்தார்.

மசூத் கைது செய்யப்பட்ட பத்து மாதங்களுக்குள், தீவிரவாதிகள் டெல்லியில் சில வெளிநாட்டினரை கடத்திச் சென்றனர். பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் மசூத் அசாரை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

ஆனால் தீவிரவாதிகளின் முயற்சி தோல்வியடைந்தது. சஹாரன்பூர் எனும் நகரிலிருந்து பணயக்கைதிகளை விடுவிப்பதில் உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறையினர் வெற்றி பெற்றனர்.

Getty Images உடல் பருமன் காரணமாக சுரங்கப்பாதையில் சிக்கியவர்

ஒரு வருடம் கழித்து, ஹர்கத்-உல்-அன்சார் அமைப்பு மீண்டும் சில வெளிநாட்டினரை கடத்திச் சென்று மசூத் அசாரை விடுவிக்க முயற்சித்தது. ஆனால், அதுவும் தோல்வியடைந்தது.

ஜம்முவில் உள்ள கோட் பலவால் சிறையிலிருந்து 1999ஆம் ஆண்டில், மசூத்தை தப்பிக்க வைக்க ஒரு சுரங்கப்பாதை கூட தோண்டப்பட்டது. ஆனால் மசூத் அசார் குண்டாக இருந்ததால் அதில் அவர் சிக்கிக்கொண்டார். மீண்டும் அவர் பிடிபட்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 1999இல், தீவிரவாதிகள் ஒரு இந்திய விமானத்தைக் கடத்தி கந்தஹாருக்குக் கொண்டு சென்றனர்.

விமானத்தில் இருந்தவர்களை மீட்பதற்காக மூன்று தீவிரவாதிகளை விடுவிப்பதற்கு இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது. அதில் ஒருவர், மசூத் அசார்.

ஆனால் இந்த முடிவுக்கு அப்போது ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா சம்மதிக்கவில்லை. எனவே அவரை சமாதானப்படுத்துவதற்காக, இந்திய உளவுத்துறை முகமையான ராவின் அப்போதைய தலைவர் அமர்ஜீத் சிங் துலத்தை ஸ்ரீநகருக்கு அனுப்பியது மத்திய அரசு.

BBC இந்திய உளவுத்துறை முகமையான ராவின் முன்னாள் தலைவர் அமர்ஜீத் சிங் துலத்துடன் ரெஹான் ஃபசல்

தீவிரவாதிகள் முஷ்டாக் அகமது சர்கார் மற்றும் மசூத் அசாரை விடுவிக்க முடியாது என அப்துல்லா கூறினார். அவரை சமாதானப்படுத்த துலத் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

ரா தலைவர் டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் வந்தார். சர்கார் ஸ்ரீநகர் சிறையிலிருந்தும், மசூத் அசார் ஜம்முவில் உள்ள கோட் பலவால் சிறையிலிருந்தும் ஸ்ரீநகருக்குக் கொண்டுவரப்பட்டனர். துலத்தும் மற்றவர்களும் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.

"எனது விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, அவர்கள் இருவரது கண்களும் கட்டப்பட்டிருந்தன. அவர்கள் இருவரும் விமானத்தின் பின்புறத்தில் அமர்ந்திருந்தனர். விமானத்தின் நடுவில் ஒரு திரை இருந்தது. திரையின் ஒரு பக்கத்தில் நானும், மறுபுறம் சர்கார் மற்றும் மசூத் அசாரும் இருந்தனர்," என்று துலத் கூறினார்.

"விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, டெல்லியை விரைவில் அடையுமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஏனென்றால் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கந்தஹார் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தார்" என்றார் துலத்.

"நாங்கள் டெல்லியில் தரையிறங்கியவுடன், அந்த இருவரையும் ஜஸ்வந்த் சிங்குடன் வேறொரு விமானத்தில் ஏற்றிச் சென்றோம். மூன்றாவது தீவிரவாதி உமர் ஷேக் ஏற்கனவே அந்த விமானத்தில் இருந்தார்," என்று கூறினார்.

ஜஸ்வந்த் சிங் கந்தஹாருக்குச் சென்றதற்கான காரணம் Getty Images அஜித் தோவல்

அதற்கு முன்னர், மூவரையும் இந்தியாவிலிருந்து கந்தஹாருக்கு யார் அழைத்துச் செல்வது என்ற கேள்வி எழுந்தது. வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விவேக் கட்ஜு, புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அஜித் தோவல், ரா-வின் அதிகாரி சிடி சஹாய் என கந்தஹாரில் இருந்த அனைவரும் ஒரே கருத்தையே கூறினர்.

'தேவைப்பட்டால், முக்கிய முடிவுகளை உடனடியாக களத்தில் எடுக்கக்கூடியவர்களை மட்டுமே இங்கு அனுப்ப வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு முடிவுக்கும் டெல்லியின் அனுமதிக்காக காத்திருக்கக்கூடிய சூழ்நிலை இங்கு இல்லை.'

ஜஸ்வந்த் சிங்கின் விமானம் கந்தஹார் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, நீண்ட நேரம் தாலிபன் தரப்பிலிருந்து யாரும் அவரைச் சந்திக்க வரவில்லை.

அவர் விமானத்தில் அமர்ந்து அவர்களுக்காகக் காத்திருந்தார்.

BBC ஜஸ்வந்த் சிங்கின் சுயசரிதை, 'A Call to Honour - In Service of Emergent India'

ஜஸ்வந்த் சிங் தனது சுயசரிதையான 'A Call to Honour - In Service of Emergent India' புத்தகத்தில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு வாக்கி-டாக்கியின் சத்தத்தைக் கேட்டேன். கவலையுடன் விவேக் கட்ஜு என்னிடம் வந்து, 'சார், பணயக்கைதிகளை அவர்கள் விடுவிப்பதற்கு முன்பாகவே, இந்த தீவிரவாதிகளை நாம் விடுவிக்க வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்' என்று கூறினார். அந்த முடிவுக்கு சம்மதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை."

"மூன்று தீவிரவாதிகளும் விமானத்தின் கதவருகே வந்தபோது, அவர்கள் மிகவும் உற்சாகமாக வரவேற்கப்பட்டதைக் கண்டேன். ஆனால், அவர்கள் கீழே இறங்காமல் இருக்க விமானத்தின் படிகளை அகற்றினோம். கீழே இருந்த மக்கள் மகிழ்ச்சியால் சத்தமாகக் கத்தினர்," என்று கூறியுள்ளார்.

அதற்கான காரணத்தை விவரித்த துலத், "நாங்கள் உண்மையான நபர்களைதான் கொண்டு வந்தோமா இல்லையா என்பதைக் கண்டறிய, பாகிஸ்தானிலிருந்து அந்த மூன்று தீவிரவாதிகளின் உறவினர்களை, ஐ.எஸ்.ஐ (ISI) கந்தஹாருக்கு அழைத்து வந்தது. அவர்கள் உண்மையான நபர்கள்தான் என்று அந்த உறவினர்கள் உறுதியாக நம்பியதும், அவர்கள் மீண்டும் எங்கள் விமானத்திற்குள் நுழைந்தார்கள். ஏற்கனவே இருட்டியிருந்தது. குளிரத் தொடங்கியது" என்றார்.

பரிசாக வழங்கப்பட்ட பைனாகுலர் Getty Images கந்தஹாரில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்

ஐந்து மணிக்கு, கடத்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளை அஜித் தோவல் சந்திக்கத் தொடங்கினார். அவர் விமானத்திலிருந்து இறங்கும்போது, கடத்தல்காரர்கள் அவருக்கு ஒரு சிறிய பைனாகுலரை பரிசாகக் கொடுத்தனர்.

"விமானத்திற்கு வெளியே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க இந்த பைனாகுலர்களை பயன்படுத்தியதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். பின்னர் நான் கந்தஹாரிலிருந்து டெல்லிக்குச் சென்றபோது, அந்த பைனாகுலரை வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் காட்டினேன். அது கந்தஹாரில் எங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நினைவூட்டுவதாக அவர் என்னிடம் கூறினார். அந்த பைனாகுலரை அவருக்கு நினைவுப் பரிசாகக் கொடுத்தேன்," என்று தோவல் கூறினார்.

விமானத்தில் எழுந்த துர்நாற்றமும், கோழி எலும்புகளும் Getty Images

வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் இந்திய அதிகாரிகள் குழுவும் கடத்தப்பட்ட விமானத்தின் பயணிகளுடன் அதே நாளில் இந்தியா திரும்பினர்.

இருப்பினும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரிந்த ஏ.ஆர்.கன்ஷ்யாம், கடத்தப்பட்ட இந்திய விமானத்திற்கு எரிபொருள் நிரப்பவும், அதை மீண்டும் டெல்லிக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் கந்தஹாரில் தங்க வைக்கப்பட்டார்.

பின்னர் இது தொடர்பாக கருத்து கூறுகையில், "எல்லோரும் சென்ற பிறகு, நான் அந்த விமானத்திற்குள் சென்றேன். மிக மோசமான துர்நாற்றம் வீசியது. விமானியின் கேபின் வரை கோழி எலும்புகளும் ஆரஞ்சு தோல்களும் கிடந்தன. கழிப்பறை மிகவும் மோசமாக இருந்தது. அது பயன்படுத்தக் கூட முடியாத அளவுக்கு இருந்தது" என்று தெரிவித்திருந்தார் ஏ.ஆர்.கன்ஷ்யாம்

சிவப்பு சூட்கேஸ் குறித்த மர்மம் Getty Images

கமாண்டர் கேப்டன் சூரி இரவு சுமார் 9 மணியளவில் கன்ஷ்யாமை சந்தித்தார். "ஐசி 184 விமானம் புறப்படுவதற்கு தாலிபன்கள் அனுமதிக்கவில்லை. அதற்கு எரிபொருள் நிரப்புவது குறித்து கூட அவர்கள் கவலைப்படவில்லை," என்று அவர் கூறினார்.

விமானத்தில் இருந்த கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான ஒரு சிவப்பு சூட்கேஸை மீட்டு தங்களிடம் கொடுக்காவிட்டால் விமானத்தை இயக்க விடமாட்டோம் என்று தாலிபன்கள் நிபந்தனை விதித்தனர்.

"கேப்டன் சூரி 11 மணி வரை விமானத்திற்குள் இருந்தார். விமானத்தின் முன் ஒரு சிவப்பு நிற பஜெரோ கார் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டேன். அதன் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன," என்று கன்ஷ்யாம் கூறினார்.

"கேப்டன் ராவ் என்ஜினை ஸ்டார்ட் செய்துவிட்டார். சில தொழிலாளர்கள் இன்னும் விமானத்திற்குள் வேலை செய்து கொண்டிருந்தனர். விமானத்தில் இருந்து ஒரு சிவப்பு சூட்கேஸை எடுத்து பஜெரோ காரில் இருந்தவர்களுக்கு அவர்கள் காண்பித்ததாக கேப்டன் ராவ் என்னிடம் கூறினார். சூட்கேஸைக் அடையாளம் காண அந்தக் காருக்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடத்தல்காரர்கள் இருந்திருப்பார்கள் போல".

"பின்னர், அவர்கள் எதிர்பார்த்த அந்த சிவப்பு சூட்கேஸ் கிடைத்துவிட்டதாக கேப்டன் சூரி கூறினார். அதில் 5 கையெறி குண்டுகள் இருந்ததாகவும் அவர் கூறினார். அதன் பிறகு, கேப்டன் ராவ் எங்களிடம் திரும்பி வந்தார். நாங்கள் அனைவரும் அன்று இரவு விமான நிலைய ஓய்வறையில் தங்கினோம்," என்று கன்ஷ்யாம் கூறினார்.

Getty Images கந்தஹாரில் கடத்தப்பட்ட விமானம் டெல்லிக்கு புறப்பட்ட இந்திய விமானம்

மறுநாள் விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்திய விமானம் ஆப்கானிஸ்தான் நேரப்படி காலை 9.43 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டது.

அதன் பிறகு, தாலிபன்களில் இருந்து ஒருவர் கூட கந்தஹார் விமான நிலையத்திற்கு வரவில்லை. விமான நிலையத்திலேயே இருந்த கன்ஷ்யாமுக்கு, கட்டுப்பாட்டு கோபுரத்திற்கு அருகில் ஒரு அதிகாரி ஒரு பொட்டலத்தைக் கொடுத்தார். அதைத் திறந்து பார்த்தபோது, சில பாதாம்கள், உலர் திராட்சைகள், ஒரு சிறிய சீப்பு, ஒரு நகவெட்டி, ஆகியவை இருந்தன.

தாலிபனின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவற்றை கன்ஷ்யாமுக்கு பரிசாக அனுப்பியிருந்தார். ஏனென்றால், கன்ஷ்யாம் கந்தஹார் விமான நிலையத்தில் இருந்தபோது, நகரத்திற்குள் செல்ல அவருக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

கன்ஷ்யாம் நண்பகல் 12 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் விமானத்தில் ஏறினார். மூன்று மணி நேரம் கழித்து அவர் இஸ்லாமாபாத்தை அடைந்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.