இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் அடுத்தக்கட்ட நிதியுதவி பற்றி முடிவெடுக்க ஐ. எம். எஃப் கூட்டம் இன்று கூடுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), 2025 ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் 10 இந்திய நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிற நிலையில் இந்தியாவின் பல எல்லையோர மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (மே 9) இந்திய ராணுவத்தின் உயரதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தியாவின் ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ஆகிய பகுதிகளில் மே 8 (வியாழக்கிழமை) இரவு பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது.
நேற்றிரவு இந்திய பாதுகாப்பு அமைச்சகம், "ஜம்மு, பதான்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன," என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மே 8 இரவு, ஜம்மு நகரத்தில் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டத்தைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. ஜம்மு விமான நிலையத்திலும் வெடிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்முவில் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதாகவும், நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது.
சண்டிகரில் உள்ள அனைத்து கடைகளும் வெள்ளி இரவு 7 மணி உடன் அடைக்கப்பட வேண்டும் என சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எக்ஸ் வலைத்தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளது. எனினும் இந்தக் கட்டுப்பாடுகள் மருந்தகங்களுக்குப் பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஜராத் பட்டாசுகள் மற்றும் டிரோன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.
"குஜராத்தில் எந்த நிகழ்ச்சி மற்றும் நிகழ்விலும் பட்டாசுகள் அல்லது டிரோன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்" என எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் ராஜஸ்தானின் பார்மரிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பார்மர் மாவட்டத்தில் டிரோன் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் டிரோன் வைத்திருப்பவர்கள் அனைவரும் இன்று உள்ளூர் காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் எனவும் பார்மர் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்மரில் பட்டாசுகளைப் பயன்படுத்தவும் இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 8000 எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்இந்திய அரசாங்கத்தின் உத்தரவைத் தொடர்ந்து இந்தியாவில் 8,000 கணக்குகளை முடக்கியுள்ளதாக சமூக ஊடக தளமான எக்ஸ் (X) வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
இதில் டான் மற்றும் ஜியோ டிவி போன்ற பாகிஸ்தான் ஊடகக் கணக்குகளும், அந்நாட்டைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்களின் கணக்குகளும் அடங்கும்.
இது தவிர, 'தி வயர்' செய்தி ஊடகம், 'இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இணைய வழங்குநர்கள் தங்கள் வலைத்தளத்தை முடக்கியுள்ளதாகவும், இந்த நடவடிக்கையை அப்பட்டமான தணிக்கைச் செயல்' என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
10 இந்திய நகரங்களுக்கான விமானங்கள் ரத்துஇந்தியா-பாகிஸ்தான் பதற்றத்திற்கு மத்தியில், இண்டிகோ ஏர்லைன்ஸ் 10 இந்திய நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது.
'பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது' என்று இண்டிகோ ஒரு எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் அதிகரித்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பிற சம்பிரதாயங்களுக்கு வழக்கத்தை விட அதிக நேரத்தை பயணிகள் செலவிட வேண்டியிருக்கும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய பதற்றச் சூழ்நிலை காரணமாக, 10 மே 2025 23:59 மணி வரை 10 இந்தியா நகரங்களுக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா, பிகானர், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் ராஜ்கோட் ஆகிய விமான நிலையங்களிலிருந்து புறப்படும் மற்றும் அங்கு செல்லும் விமானங்களை இண்டிகோ ரத்து செய்துள்ளது.
பாகிஸ்தானுக்கான நிதியுதவியை இன்று ஆய்வு செய்கிறது ஐ.எம்.எஃப்பாகிஸ்தானுக்கு வழங்கப்பட உள்ள அடுத்தக்கட்ட 7 பில்லியன் டாலர் நிதியுதவி பற்றி சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) இன்று பரிசீலனை செய்ய உள்ள நிலையில் அதற்கு எதிராக இந்தியா அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஐ.எம்.எஃப்-இன் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தியா தன்னுடைய பார்வையை ஐ.எம்.எஃப் முன் வைக்கும் எனத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தானுக்கான கடந்த கால கடனுதவிகள் எவ்வளவு வெற்றிகரமாக இருந்துள்ளன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அதிகரித்த விலைவாசி மற்றும் குறைந்த வளர்ச்சியில் இருந்து மீண்டு வரும் பாகிஸ்தானுக்கு இந்த நிதியுதவி அவசியமானதாகிறது. இந்திய தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தாலும் முடிவு எடுப்பதில் அதன் செல்வாக்கு என்பது மிகவும் அளவானது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு மத்தியில் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா பிரதமர் நரேந்திர மோதியை வியாழன் அன்று சந்தித்துப் பேசினார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே தலையிட முடியாது எனத் தெரிவித்திருந்தார்.
ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு2025 ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை உடனடியாக ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கூறியுள்ளது
போட்டியின் புதிய அட்டவணை மற்றும் இடங்கள் குறித்த கூடுதல் தகவல்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, நிலைமையை விரிவாக மதிப்பிட்ட பிறகு, உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
இது தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்ட பிசிசிஐ, தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
"கிரிக்கெட் மீது இந்தியர்களுக்கு பெரும் ஆர்வம் இருந்தாலும், தேசத்தின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் நமது நாட்டின் பாதுகாப்பையும் விட பெரியது எதுவுமில்லை. இந்தியாவைப் பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ராஜ்நாத் சிங்பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (மே 9) இந்திய ராணுவத்தின் உயரதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு இயக்குநரகம், "இன்று புது டெல்லியில் உள்ள தெற்கு பிளாக் அலுவலகத்தில், எல்லையில் நிலவும் பாதுகாப்புச் சூழல் மற்றும் இந்திய ஆயுதப் படைகளின் தயார்நிலை குறித்த உயர்மட்டக் கூட்டம் ஒன்றுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்" என்று கூறியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, விமானப் படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏபி சிங் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமை சிஎன்என் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாத்ரா, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை 'தீவிரவாதத்திற்கு எதிரான போர்' என்று விவரித்தார்.
பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு மட்டுமே இந்தியா பதிலடி கொடுத்து வருவதாக அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த 'தீவிரவாதிகள்' மீது இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. மறுபுறம், இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 'போர்' தொடுக்கிறதா என்று வினய் குவாத்ராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'தீவிரவாதிகளுக்கு எதிரான போரில்' இந்தியா ஈடுபட்டுள்ளது என்று பதிலளித்தார்.
இந்தப் பதற்றம் அணு ஆயுதப் போராக தீவிரமடைவதற்கான சாத்தியம் உள்ளதா என்றும் குவாத்ராவிடம் கேட்கப்பட்டது, அதற்கு குவாத்ரா, 'இதை பாகிஸ்தானிடம் கேட்க வேண்டும்' என்றார்.
மே 8 நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் முழு மேற்கு எல்லையையும் தாக்கியதாக இந்திய ராணுவத்தின் கூடுதல் பொது தகவல் இயக்குநரகம் (ADG PI) தெரிவித்துள்ளது.
எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ள இந்திய ராணுவத்தின் கூடுதல் பொது தகவல் இயக்குநரகம் (ADG PI), "பாகிஸ்தான் ஆயுதப் படைகள் மே 8, 2025 நள்ளிரவில் முழு மேற்கு எல்லையிலும் டிரோன்கள் மற்றும் பிற வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தின. ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் வீரர்கள் பல முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினர்," என்று குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்கள் திறம்பட செயலிழக்கப்பட்டதாகவும், போர் நிறுத்த மீறல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள பிபிசி செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர் கூறுகையில், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் உரி பகுதியில் பலத்த ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், எல்லைக்கு அருகிலுள்ள பொதுமக்களின் பகுதிகள் குறிவைக்கப்பட்டதாகவும் கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் உள்ள பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழு மின்தடை ஏற்பட்டதாகக் கூறினார்.
ஆனால், இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் இருக்கும் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழுமையான மின் தடை அமலில் இருப்பதாகக் கூறினார்.
அப்பகுதியில் இருந்து செய்திகளை வழங்கி வரும் திவ்யா ஆர்யா, "பூஞ்ச் நகரத்தில் மின் தடை அமலில் உள்ளது. தற்போது விமான தாக்குதலின் சைரன்களை கேட்டதாகவும், குண்டு வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர். அதோடு, அவர்கள் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்குள்ள எங்கள் குழுவினர் தெரிவித்தனர்," என்று கூறினார்.
மேலும், ஜம்மு நகரிலும் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகக் கூறிய அவர், இரவு 08:45 மணியளவில் ஒரே நேரத்தில் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.
"ஜம்மு நகரின் தெற்கு நோக்கிச் சென்றால், அங்குதான் எல்லாம் தொடங்கியது" என்கிறார் திவ்யா ஆர்யா. அங்கு வசிக்கும் மக்களிடம் இருந்து வெடிப்புகள் குறித்த தகவல்கள் கிடைத்தன.
"ஜம்மு நகரில் சுமார் 10 வெடிப்புகள் கேட்டதாக ஜம்மு நகரின் ஒரு குடியிருப்பாளர் என்னிடம் தெரிவித்தார். அதன் பிறகு நகரத்தில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. வழக்கமான தொலைபேசி இணைப்புகளிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் அழைப்புகள் மட்டுமே வேலை செய்கின்றன."
நேற்றிரவு முதல் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளதாகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் திவ்யா ஆர்யா கூறினார்.
"ஜம்முவில் இருந்து ஒன்றரை மணிநேரப் பயணத்தில் இருக்கும் கத்துவாவில் வாழும் மக்களிடமும் நான் பேசினேன். அங்கு குறைந்தது இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்."
இதற்கிடையே, ராஜஸ்தானின் பார்மர், ஜெய்சல்மர், பஞ்சாபின் குர்தாபூர் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்தியாவின் அரசு ஊடகமான டிடி நியூஸ், பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஜம்முவில் அமைந்திருக்கும் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் 8 ஏவுகணைகளை ஏவியதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதோடு, ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும் இந்திய வான் பாதுகாப்புப் பிரிவுகள் இடைமறித்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாகவும் டிடி நியூஸ் தெரிவித்துள்ளது.
'நாங்கள் தாக்கவில்லை'- பாகிஸ்தான் அமைச்சர் மறுப்புஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெறும் எந்தவொரு தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பொறுப்பல்ல என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியுள்ளார்.
"நாங்கள் இதை மறுக்கிறோம், இதுவரை எந்தத் தாக்குதலையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை" என்று பிபிசியிடம் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறினார்.
அவரது கூற்றுப்படி, "பாகிஸ்தான் தாக்கும்போது, அது அனைவருக்கும் தெரியும். நாங்கள் தாக்கிவிட்டு பின்னர் மறுக்க மாட்டோம்".
ஜம்மு காஷ்மீரில் வெடிப்புகள் மற்றும் மின் தடை பற்றிய செய்திகள் வெளியான சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் பிபிசியிடம் பேசினார்.
பஞ்சாப், ஜம்மு, காஷ்மீர், லடாக், குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 24 விமான நிலையங்கள் சிவில் சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் உத்தரவிட்டுள்ளது.
அறிவுறுத்தல்களின்படி, அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்துப் பயணிகளுக்கும் இரண்டாம் நிலை சோதனைகள் (SLPC) மேற்கொள்ளப்படும். மேலும், விமான நிலையங்களில் ஏர் மார்ஷல்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தை மேற்கோள் காட்டியுள்ள ஏர் இந்தியா தனது எக்ஸ் பக்கத்தில், உள்நாட்டுப் பயணிகள் இப்போது விமான நிலையத்திற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே வந்து சேர வேண்டும் எனவும், செக்-இன் கதவுகள் 75 நிமிடங்களுக்கு முன்பே மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு