இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் சீனாவுக்கு என்ன ஆபத்து?
BBC Tamil May 09, 2025 04:48 PM
Getty Images இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு உலகின் பல நாடுகள் எதிர்வினையாற்றியுள்ளன. அதில் அண்டை நாடான சீனாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் மீது இந்தியா தாக்குதல் நடத்திய பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு உச்சகட்ட பதற்றத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு உலகின் பல நாடுகள் எதிர்வினையாற்றியுள்ளன. அதில் நமது மற்றொரு அண்டை நாடான சீனாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதிகளில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் 'வருந்தத்தக்கவை' என்று சீன வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமை சீனாவுக்கு 'கவலை' தருவதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

"இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள், இந்த நிலை எப்போதுமே தொடரும். அவை இரண்டும் பரஸ்பரம் அண்டை நாடுகள் என்பதுடன், இரண்டுமே சீனாவின் அண்டை நாடுகளும் ஆகும். பயங்கரவாதம் எந்த வகையில் இருந்தாலும் அதை சீனா எதிர்க்கிறது" என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரு அண்டை நாடுகளும் "அமைதியைப் பேணவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் செயல்களைத் தவிர்க்கவும்" வேண்டுமென சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் நிலையற்ற தன்மை ஏற்படுவதையோ, அந்நாடு நிலைகுலைவதையோ சீனா ஒருபோதும் விரும்பாது. ஏனென்றால் அந்நாட்டிலுள்ள சீனாவின் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு வீணாகிவிடும் என்று அரசியல் நிபுணர்கள் நம்புகின்றனர்.

கடந்த 2005 முதல் 2024 வரை பாகிஸ்தானில் சுமார் 68 பில்லியன் அமெரிக்க டாலர்களை சீனா முதலீடு செய்துள்ளது. இது தவிர, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) மற்றும் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ், பாகிஸ்தானில் சீனா மாபெரும் முதலீட்டை மேற்கொண்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், மத்திய ஆசியாவை சாலை வழியாக இணைக்கும் தனது கனவுத் திட்டம் பாதியில் நின்று போவதை சீனா விரும்பாது.

இந்தக் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் சீன விவகாரங்களில் நிபுணரும் பென்னட் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான டாக்டர் திலக் ஜா, இவ்வாறு கூறுகிறார்: "தெற்காசியாவில் பதற்றம் அதிகரித்தால் சீனாவின் முதலீடு மற்றும் அதன் நீண்டகால கனவுத் திட்டங்களில் நேரடித் தாக்கம் ஏற்படும். தனது நலன்களைப் பாதிக்கும் எதுவும் நடைபெற சீனா விரும்பாது."

சீனா, பாகிஸ்தான் இடையிலான நட்புறவு Getty Images சீனா, பாகிஸ்தான் இடையிலான ராஜ்ஜீய உறவுகள் 1951 மே 21 அன்று தொடங்கின

சீனா, பாகிஸ்தான் இடையிலான ராஜ்ஜீய உறவுகள் 1951 மே 21 அன்று தொடங்கின. பாகிஸ்தானும் சீனாவும் பல தசாப்தங்களாக பாதுகாப்பு ஒத்துழைப்பையும் ராஜ்ஜீய உறவுகளையும் கொண்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில், சீனாவை பொருளாதார ரீதியாகச் சார்ந்திருக்கும் தன்மையும் பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை சீனா வழங்கியது. இருந்தபோதிலும், இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு போரிலும் பாகிஸ்தானை சீனா நேரடியாக ஆதரிக்கவில்லை. மேற்கத்திய நாடுகளுடன் இந்தியாவுக்கு நெருக்கம் அதிகரித்த நேரத்தில், பாகிஸ்தான் சீனாவின் பக்கம் சாய்ந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக FATF எனப்படும் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் கடுமையான நடவடிக்கைகளைத் தவிர்க்க, அந்த நாட்டுக்கு கடன்கள் முதல் பல்வேறு வாய்ப்புகள் வரை கொடுத்து உதவ சீனா முன்வந்துள்ளது.

பாகிஸ்தானுடன் நல்லுறவைப் பேணும் அதேவேளையில் சீனா இந்தியாவுடனான உறவுகளையும் சீராகவே பேணி வருகிறது.

"இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுவதையோ அல்லது போர் போன்ற பதற்றமான சூழல் நிலவுவதையோ சீனா விரும்பாது. அண்டை நாடுகளிடையே போர் மூண்டால், சீனாவின் நலன்களும் பாதிக்கப்படும். அதுதவிர, மத்திய ஆசியாவில் நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழலும் உருவாகும்" என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன ஆய்வுகள் பேராசிரியர் ஆர். வரபிரசாத் கூறுகிறார்.

தற்போது வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடனான உறவு சீனாவுக்கு பதற்றமாக இருக்கும் சூழ்நிலையில், இந்தியாவுடனான உறவுகளை இணக்கமாக வைத்திருக்கவே சீனா விரும்பும்.

"தனது சொந்த நலன்களில் அதிக நாட்டம் கொண்டுள்ள சீனா, எந்தவொரு சர்ச்சையிலும் சிக்க விரும்புவதில்லை. இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு போரிலும் பாகிஸ்தானை நேரடியாக சீனா ஆதரிக்காததற்கும் இதுதான் காரணம்" என்று வரபிரசாத் கூறுகிறார்.

"இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் வளர்ச்சியை முடுக்கிவிட்டு, பிராந்தியத்தை மேம்படுத்த சீனா விரும்புகிறது. 'சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்' மற்றும் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும் பாகிஸ்தானில் வெற்றி பெற்றால்தான், ஜின்ஜியாங் மாகாணத்தின் வளர்ச்சி சாத்தியமாகும். இந்தத் திட்டத்திற்கு இந்தியா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சிக்கலை மேலும் அதிகரிக்க சீனா விரும்பாது" என்று டாக்டர் திலக் ஜா கூறுகிறார்.

சீனா-பாகிஸ்தான் வர்த்தகம்

பாகிஸ்தானின் மாபெரும் வர்த்தகக் கூட்டாளியாகத் திகழும் சீனா தற்போது அந்நாட்டின், இறக்குமதிக்கான மிகப்பெரிய மூலமாகவும் உள்ளது. 2024ஆம் ஆண்டில் சீனா, பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு வர்த்தகம், அதற்கு முந்தைய ஆண்டைவிட கணிசமாக அதிகரித்து 23.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. சீன சுங்கத் துறையின் தரவுகள் இதை உணர்த்துகின்றன. இந்தத் தொகை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானுக்கான சீனாவின் ஏற்றுமதி 17 சதவிகிதம் அதிகரித்து 20.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதி 18.2 சதவிகிதம் குறைந்து 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் குறைந்துள்ளது.

ANI இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நேற்றிரவு "ஜம்மு, பதான்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அதை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்ததாகவும்" இந்தியா கூறுகிறது.

கடந்த ஆண்டில்(2024) சீனா, சுமார் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மின்னணு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்தது. இவற்றில், 35 சவிகிதம் செமிகண்டக்டர் சாதனங்கள் மற்றும் 27 சதவிகிதம் ஸ்மார்ட்போன்கள்.

சீனா பாகிஸ்தானுக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அணு உலைகள், பாய்லர்கள், இயந்திரங்கள் மற்றும் இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்தது. அதுமட்டுமல்ல, 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இரும்பு மற்றும் எஃகு பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

"ஒரு நாட்டோடு மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்யும்போது, பொருளாதார நலன்களை அடைய அந்நாட்டின் நிலைமை சிறப்பாக இருக்க வேண்டும் என்று சீனா விரும்புவது இயல்பானது" என்று டாக்டர் திலக் ஜா கூறுகிறார்.

"சீனாவின் திட்டங்கள் தொடர்பாக பாகிஸ்தானில் ஏற்கெனவே பல அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ள நிலையில், இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான சூழ்நிலை உருவாவது சீனாவுக்கு நல்லதல்ல" என்று ஆர். வரபிரசாத் கூறுகிறார்.

"பாகிஸ்தானில் வசிக்கும் சீன குடிமக்களுக்கு ஏற்கெனவே பாதுகாப்பு நெருக்கடி இருக்கும் நிலையில், தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் அதிகரித்தால், சீனாவின் அனைத்துத் திட்டங்களும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று அவர் கணிக்கிறார்.

சீனாவின் ஆர்வம் Getty Images அமெரிக்கா உடனான சிக்கல்கள் அதிகரிக்கத் தொடங்கியதும், பாகிஸ்தான் சீனாவை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளது

அமெரிக்காவுடனான சிக்கல்கள் அதிகரிக்கத் தொடங்கியதும், பாகிஸ்தான் சீனாவை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளது. சீனாவும் பாகிஸ்தானும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டன. அத்துடன், சீனாவிடம் இருந்து நவீன ஆயுதங்களையும் பாகிஸ்தான் பெருமளவில் வாங்கத் தொடங்கிவிட்டது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அறிக்கைப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பாகிஸ்தான் கொள்முதல் செய்த ஆயுதங்களில் 81 சதவிகிதம் சீனாவில் இருந்து பெற்றவை எனத் தெரிகிறது.

அதாவது அண்மை ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு வந்த ஐந்து ஆயுதங்களில் நான்கு சீனாவிடம் இருந்து வாங்கியது. பாகிஸ்தானுக்கு PL-15 ஏவுகணைகளை சீனா வழங்கியுள்ளது. சீனாவின் நவீன BVR தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் PL-15, SD-10 போன்ற ஏவுகணைகள், நீண்ட தொலைவிலிருந்து வானில் பறக்கும் விமானங்களை அழிக்கும் திறன் கொண்டவை.

Getty Images பாகிஸ்தானின் குவாதர் துறைமுகம், சீனாவால் உருவாக்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சீனாவின் எண்ணம் குறித்து பிபிசி உருது சேவை பாகிஸ்தான் முன்னாள் தூதர் தஸ்னீம் அஸ்லாமிடம் பேசியது. அதற்கு பதிலளித்த அவர், பாகிஸ்தான் வழியாகவே சீனா வளைகுடா நாடுகளுக்கு சுலபமாகச் செல்ல முடிகிறது என்று கூறினார்.

"இந்தப் பிராந்தியத்தில் சீனா ஒரு பெரிய நாடு. இரு போட்டி நாடுகளுடனும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவினால் அது சீனாவுக்கு நல்லது. சீனா தனது பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதையே விரும்பும்" என்று தஸ்னீம் அஸ்லாம் கூறியிருந்தார்.

"பாகிஸ்தான், இந்தியா இடையிலான அமைதி மட்டுமே சீனாவின் வளர்ச்சிக்கு உதவும். ஏனென்றால், சீனாவின் திட்டங்கள் முடிந்துவிட்டாலும், பாதுகாப்பு நெருக்கடி மற்றும் உறுதியற்ற தன்மை பிராந்தியத்தில் தொடர்ந்தால், அந்தத் திட்டத்தை சீனா வணிக ரீதியாகப் பயன்படுத்திக் கொள்வது கடினம்.

தற்போது, குவாதர் துறைமுகம் தயாராக இருக்கிறது. இருந்தாலும், பிராந்தியம் சச்சரவின்றி அமைதியாக இருக்கும்போது மட்டுமே சீனா அந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்" என்று திலக் ஜா கூறுகிறார்.

சர்ச்சையில் சிக்க விரும்பாத சீனா Getty Images இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று சீனா எப்போதும் கேட்டுக்கொள்கிறது. அந்நாடு எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை.

இந்தியா, பாகிஸ்தான், சீனா இடையிலான உறவுகள் குறித்துப் பேசும் ஆர். வரபிரசாத், "இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று சீனா எப்போதும் கேட்டுக்கொள்கிறது. அது எந்த சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை" என்று கூறுகிறார்.

"அண்டை நாடுகளுடன் நிதானமாகவும் சுமூகமாகவும் நடந்து கொள்வதையே சீனா விரும்புகிறது. அதிலும், அமெரிக்கா உடனான வர்த்தகப் போர் என்ற சிக்கல் முளைத்துள்ள நிலையில், சீனாவின் நிர்பந்தங்கள் அதிகரித்துவிட்டன. எனவே இந்தியாவுடன் மோதல் போக்கை மேற்கொள்ள அந்நாடு விரும்பாது" என்று வரபிரசாத் கூறுகிறார்.

இந்தியா, சீனாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருப்பதால், இந்தியாவுடன் வலுவான உறவுகளைப் பேணவே அந்நாடு விரும்புகிறது.

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேலை போலவே இந்தியாவும் சர்வதேச நாடுகளின் ஆதரவை விரும்புகிறது. இருப்பினும் பாகிஸ்தானை ராஜ்ஜீய ரீதியாக சீனா ஆதரிப்பதால் இந்தியாவுடான ராஜ்ஜீய உறவு மட்டுப்பட்டு இருப்பதாக வர பிரசாத் கூறுகிறார்.

இந்தியா, பாகிஸ்தான், சீனா இடையிலான உறவுகள் குறித்து திலக் ஜா இவ்வாறு கூறுகிறார்: "இந்த மூன்று நாடுகளும் போட்டியாளர்கள் மட்டுமல்ல, அண்டை நாடுகளும்கூட. எனவே, பிராந்தியத்தின் நிலைத்தன்மையில் சிக்கல் ஏற்பட்டால், அது மூன்று நாடுகளுக்குமே இழப்பை ஏற்படுத்தும்."

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.