இந்தியாவின் முக்கிய நகரங்களில் 18 வது ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள 7 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானில் நடைபெற்று வந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் யு.ஏ.இ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
அதே சமயம் ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி இடையிலான ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. தர்மசாலாவில் இருந்து வீரர்களை அழைத்து வர சிறப்பு வந்தே பாரத் ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மின்விளக்கு கோபுரம் ஒன்று பழுதடைந்து இருக்கிறது.
மேலும் இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என பி.சி.சி.ஐ. விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், தற்போது போர் பதற்றம் நிலவி வருவதால் ஐ.பி.எல். தொடரை தொடர்ந்து நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய பி.சி.சி.ஐ இன்று முக்கிய ஆலோசனை நடத்திய நிலையில், எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.