இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “போர் நிறுத்தம் வரவேற்கத்தக்க நடவடிக்கை - அமைதி நிலைத்திருக்கட்டும். இந்திய ராணுவத்திற்காக தமிழ்நாடு ஒற்றுமையுடன் அணிவகுப்பு பேரணி நடத்தியது. நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு எங்கள் சல்யூட்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சூட்டுக்கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாத அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' மேற்கொண்டுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா சில உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்களை வெளியேற்றுதல், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை ரத்து செய்தல் உள்ளிட்டவை அடங்கும். இந்தநிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே அனைத்து விதமான தாக்குதல்களும் இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தப்படுவதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.