உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள லுஹாரி கவி கிராமத்தில், திருமண சடங்கில் ஏற்பட்ட வாக்குவாதம், முழு திருமண நிகழ்வையும் குலைக்க செய்துள்ளது. அதாவது காஸ்கஞ்ச் மாவட்டம் விட்டோனா கிராமத்திலிருந்து வந்த திருமண ஊர்வலம், சனிக்கிழமை பிற்பகலில் மணமகனுடன் சேர்ந்தே எட்டா மாவட்டத்தை வந்தடைந்தது.
திருமணத்திற்கு முன்பு, வழக்கம்போல நடைபெறும் “காலணியைத் திருடும்” சடங்கில், மணமகளின் இளைய சகோதரி ₹1000 கேட்டதற்கு, மணமகன் தரப்பினர் ₹200 மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இரு தரப்பிடமும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை பெரிதாகியது.
மணமகளின் தந்தை லால் முகமது, “திறனுக்கு மேல் செலவு செய்து, விருந்தோம்பலில் எந்தக் குறையும் விடாமல் செய்தோம். ஆனால், மணமகன் தரப்பில் எந்த பரிசுகளும் வழங்கப்படவில்லை” என வேதனையுடன் தெரிவித்தார்.
“நாங்கள் கைகளைக் கூப்பி மன்னிப்பு கேட்டோம், புறப்பட தயாராக இருந்தோம். ஆனால், மணமகனின் தாய் ‘அந்தப் பெண்ணை காரின் டிக்கியில் எடுத்துச் செல்வோம்’ எனவும், அவரது சகோதரி ‘வீட்டில் எடுத்துச் சென்று வெட்டுவோம்’ எனவும் கூறினர்,” என்று கூறியதும், மணமகள் தரப்பினர் பயந்து கிளம்ப முடியாமல் தங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்ந்து அதிகரித்ததால், இரவு முழுவதும் இரண்டு தரப்பினரிடையே பலமுறை பஞ்சாயத்து நடத்தப்பட்டது. காவல்துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் எந்த முடிவும் எட்டப்படாததால், ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை திருமணம் தாமதமானது. இறுதியாக திருமணமும் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து எட்டா மாவட்ட காவல்துறையினர் கூறுகையில், “தகவல் எங்களது கவனத்தில் உள்ளது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ புகாரும் பெறப்படவில்லை. புகார் வந்தால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்துள்ளனர். ஒரு எளிய சடங்கு நிகழ்வு, சமரசமின்றி முழு திருமணத்தை முடிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியது என்பது இவ்விரோதத்தின் முக்கிய பரிணாமமாக அமைந்துள்ளது.