கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!
Dhinasari Tamil May 12, 2025 11:48 PM

#featured_image %name%

hindumunnani

மதுரை கள்ளழகர் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் மரணம் அடைந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கோவில்களில் தொடர் மரணங்கள் ஏற்பட்டு வருவதாகவும், சம்பவங்களுக்கு பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இந்துமுன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கை:

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் விஐபிகள் வரிசையில் நின்ற திருநெல்வேலியை சார்ந்த சிவில் இன்ஜினியர் பூமிநாதன் என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சித்திரை திருவிழாவில் 5 பேர் கூட்ட நெரிசலில் பலியான சம்பவத்தை நினைவூட்டி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் வசதி செய்து கொடுக்குமாறு கடந்த 25 நாட்களுக்கு 16.4.2025 அன்று இந்துமுன்னணி செய்தி வெளியிட்டது.

பல அரசியல் கட்சியினரும் அறிவுறுத்தினர். ஆனாலும் அதை கண்டு கொள்ளாமல் தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் மெத்தனமாகவும் அலட்சியப் போக்கிலும் செயல்பட்டதன் காரணமாகவே இந்த துயர சம்பவம் நடைபெற்று உள்ளது. இதற்கு தமிழக அரசு முழுபொறுப்பேற்க வேண்டும்.

விஐபி வரிசையிலேயே இவ்வளவு குளறுபடிகளும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கிறது என்றால் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை எந்த அளவிற்கு அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்பதை காண முடிகிறது.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் திருச்செந்தூர் , பழனி , ராமேஸ்வரம் ஆகிய திருக்கோவில்களில் அடுத்தடுத்த நாட்களில் தரிசனத்திற்காக நின்ற 3பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தனர்.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கிய தமிழக அரசு கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது இந்து பக்தர்களை இந்த அரசு எவ்வளவு அலட்சியமாக நினைக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

தொடர்ந்து கோவில்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது பக்தர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது ஆலயங்களில் நடைபெற்று வரும் தொடர் மரணங்களுக்கு பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள் அமைச்சர் பதவி ராஜினாமா செய்ய வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.

மதுரையில் அழகர் திருவிழா விஐபி வரிசை கூட்ட நெரிசலில் மரணமடைந்த பூமிநாதன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.