அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கையாக, இரு நாடுகளும் பரஸ்பர வரி விதிப்புகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
தற்போதைக்கு 90 நாட்களுக்கு இந்த வரி குறைப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் என இருநாடுகளுக்கு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு விதித்த 145 % வரியை 30%-ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.
அதே போல சீனா, அமெரிக்க பொருட்களுக்கு விதித்த 125% வரியை 10% ஆக குறைக்கும்.
சுவிட்சர்லாந்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகள் பரஸ்பரம் விதித்த வரிகளில் 115% வரியை புதன்கிழமை முதல் குறைக்கும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார்.
இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து தொடர்ந்து விவாதிக்க ஒரு செயல்முறை உருவாக்கப்படும் என்றும், அதற்கு அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் சீனாவின் துணை பிரதமர் ஹி லிஃபாங் தலைமை தாங்குவர் என்றும் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மற்றும் உலக பொருளாதாரத்துக்கும் முக்கியம் என்பதை உணர்த்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல கட்ட பதிலடிக்கு பிறகு உடன்பாடுபல கட்ட பதிலடி வரி விதிப்புக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு உடன்பாட்டுக்கு ஒப்புக்கொண்டுள்ளன.
தனது வர்த்தக போரின் மூலம் உலக பொருளாதாரத்தில் டிரம்ப் அதிர்வலைகளை ஏற்படுத்திய வேகத்தைக் கருத்தில் கொண்டால் இந்த 90 நாட்கள் என்பது நீண்ட காலமாகக் கருதப்படும் என்கிறார் பிபிசி வணிக செய்தியாளர் ஜோனாதன் ஜோசப்ஸ் கூறுகிறார்.
மேலும், ''கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானதிலிருந்து அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக பதற்றம் அதிகரித்தது. இந்த பதற்றம் உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த உடன்பாடு, பதற்றத்தைக் குறைக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது'' என பிபிசி வணிக செய்தியாளர் ஜோனாதன் ஜோசப்ஸ் கூறுகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு