தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள உப்பளப் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் நகர தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் சிப்காட் போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது உப்பளப்பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்க்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அங்கு தங்கி இருந்து வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரிய வந்தது,
இதனைத் தொடர்ந்து பீகார் மாநிலம் பரியப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனிஷ்சாக் (28), முனனா தேவன் (29), சதீஷ்குமார் (19), சமஸ்டிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிஜி அலி பஸ்வான் (29) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 80 கிராம் கஞ்சா, கஞ்சாவை புகைக்கும் இரண்டு பைப், 40 பாக்கெட் ஸ்வாகத் போதை புகையிலை மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.