தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் திருவேங்கடம் வட்டம், செவல்குளத்தில் உள்ள செயின்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அவர், அந்த பள்ளியில் பணிபுரிந்த காலங்களுக்கு பணி அனுபவ சான்று கேட்டு பள்ளி தாளாளரிடம் விண்ணப்பித்துள்ளார்.
அதன்படி பணி அனுபவ சான்றை தயார் செய்த பள்ளி தாளாளர் நாகராஜ் (46) என்பவர், அதில் மேலொப்பம் பெற்று, அலுவலக நடைமுறைகளை முடித்து தருவதற்காக தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ் குமாரை சந்தித்து பேசியபோது, அவர் ஆசிரியரின் பணி அனுபவ சான்றை மேலொப்பம் பெற்று அலுவலக நடைமுறைகளை முடித்து வழங்குவதற்கு ரூ.60,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பள்ளி தாளாளர், இது குறித்து தென்காசி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணம் 60 ஆயிரம் ரூபாயை அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ் குமாரிடம் பள்ளி தாளாளர் நாகராஜ் கொடுத்தார். லஞ்ச பணத்தை சுரேஷ் குமார் பெற்றுக் கொண்டதை அறிந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பால் சுதர், காவல் ஆய்வாளர் ஜெய ஸ்ரீ மற்றும் போலீசார், விரைந்து சென்று சுரேஷ் குமாரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.