தென்மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது!
Dinamaalai May 14, 2025 05:48 PM

கேரளாவில் இம்மாதம் 27ம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவங்கியது.

தமிழகத்தில் பல பகுதிகளிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி உள்ள நிலையில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக, வேலூர், கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. 

இந்நிலையில் தென்மேற்கு பருமவழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று மே 13ம் தேதி தொடங்கியுள்ளது. அதே போல கேரளாவில் வரும் 27ம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. 

கடந்த இரு ஆண்டுகளை விட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 4 நாட்கள் முன்னதாக தொடங்க உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த தென் மேற்கு பருவமழை காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கும் மழை பொழிவு கிடைக்கும். அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் பருவமழை படிப்படியாக குமரிமுனை, கேரளா என வட மாநிலங்களுக்கும் பரவும். கொளுத்தும் கோடைக்காலத்தை தொடர்ந்து தொடங்கும் பருவமழை என்பதால் இந்த தென்மேற்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகம். தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.