காட்டுப்பகுதியில் நடைபெறும் இயற்கை நிகழ்வுகள் எப்போதும் மனிதர்களை ஈர்த்தே தீரும். அந்த வகையில், இந்திய வனப்பணித் துறை அதிகாரி ரமேஷ் பாண்டே பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கூட்டமாக யானைகள் நதியில் குளிக்கின்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் நடுவே, ஒரு குட்டி யானை நீரில் விளையாடி மகிழ்கிறது. நீரைத் தெறிக்கவிட்டு, அதன் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் காட்சி எங்களை போல பலரையும் கவர்ந்துள்ளது.
இந்த குட்டி யானையை சுற்றி அதன் தாய், பாட்டி மற்றும் மாமிகள் பாதுகாப்பாக நின்று கொண்டு, அதை வட்டமாக சூழ்ந்திருக்கின்றனர். இது, ஒரு முக்கிய நபருக்கு வழங்கப்படும் Z+ பாதுகாப்பு போன்று தோன்றுவதாக அதிகாரி ரமேஷ் பாண்டே தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“இது ஒரு வித்தியாசமான Z+ பாதுகாப்பு தான். குட்டி யானை நீரில் விளையாட, அதன் தாய், பாட்டி மற்றும் மாமிகள் பாதுகாப்பாக சுற்றி நிற்கிறார்கள்” என அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவுக்கு பலரும் ரசனையுடன் பதிலளித்துள்ளனர். ஒருவர், “Z+ பாதுகாப்பு என்பதைப் பயன்படுத்திய விதம் மிக அற்புதம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “மிக அழகான படம்” என வர்ணித்துள்ளார்.