கனடாவின் பிரதமராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க் கார்னி தலைமையிலான புதிய அமைச்சரவையில், முக்கியமான மாற்றத்துடன் வெளியுறவுத் துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜொலியை தொழில் அமைச்சர் பதவிக்கு மாற்றி நியமிக்கப்பட்டுள்ளார்.
58 வயதான அனிதா ஆனந்த், இதற்கு முன்பு கனடாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளில் பணியாற்றியவர். புதிய பதவிக்கு பதவியேற்கும் போது, வழக்கம்போல இந்து மறைநூலான பகவத் கீதையின் மீது கை வைத்து சத்தியம் செய்தார். இது, அவரது கடந்த பதவிகளிலும் தொடர்ந்த மரபாகும்.
மார்க் கார்னியின் புதிய அமைச்சரவை 28 உறுப்பினர்களைக் கொண்டதாகும். அதில் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அனுபவம் மற்றும் சமநிலையாக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் கார்னி, “இது கனடாவுக்குத் தேவையான மாற்றங்களை கொண்டு வரும் அமைச்சரவை” என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் காலகட்டத்திலிருந்து வேறுபட்ட புது துவக்கத்தைக் காட்டும் வகையில், சில புதிய “Secretary of State” பதவிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய பதவிக்குப் பிறகு தனது X பக்கத்தில் பதிவிட்ட அனிதா ஆனந்த், “கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதில் பெருமிதம் கொள்கிறேன். பிரதமர் மார்க் கார்னி மற்றும் நமது குழுவுடன் சேர்ந்து, ஒரு பாதுகாப்பான, நியாயமான உலகை உருவாக்க உழைப்பேன்” எனக் கூறினார்.
1967-ம் ஆண்டு மே 20-ஆம் தேதி, கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் கென்ட்வில்லில் பிறந்த அனிதா ஆனந்த், இந்தியாவிலிருந்து 1960களில் குடிபெயர்ந்த டாக்டர் சரோஜ் ராம் மற்றும் எஸ்.வி. ஆனந்த் தம்பதியரின் மகளாவார். அவரது தாய் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரும், தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் ஆவர்.
அனிதா ஆனந்த் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் (Jurisprudence) சிறப்பாக படித்து, பின்னர் டால்ஹவுசி மற்றும் டொரண்டோ பல்கலைக்கழகங்களில் சட்டத்தில் பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளை முடித்துள்ளார்.
1995-ஆம் ஆண்டு கனடாவின் சட்டத்துறையில் பணியாற்றும் ஜான் நோல்டனை திருமணம் செய்து கொண்ட அனிதா ஆனந்த், 4 குழந்தைகளுடன் ஒக்வில்லில் வசித்து வருகிறார். 2019-ல் கனடாவின் கூட்டுத்தாபன அரசில் அமைச்சராக நியமிக்கப்படும் முதல் இந்து பெண் என்ற வரலாற்றுப் பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.
அண்மைய நாட்களிலும், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது அவரது உறுதியான மற்றும் துல்லியமான செயல்முறைகள் அரசியல் வட்டாரத்தில் பாராட்டுக்குரியவை என்றதாகக் குறிப்பிடப்படுகிறது.