கர்நாடக மாநிலத்தில் உப்பள்ளி கமரி பேட்டை பகுதியில் சேத்தன் என்ற 15 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவன் அப்பகுதியில் உள்ள 13 வயது சிறுவனுடன் தினமும் விளையாடுவது வழக்கம். இவர்கள் இருவரும் கோடை விடுமுறையின் காரணமாக தினமும் வீட்டின் அருகேயுள்ள மைதானத்தில் ஒன்றாக விளையாடி வந்தனர். இந்நிலையில் சம்பவ நாளில் சேத்தன் தனது நண்பருடன் மைதானத்தில் விளையாடிவிட்டு 5 ரூபாய் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை பங்கு வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது பங்கு வைப்பது தொடர்பாக அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தகராறாக முற்றிய நிலையில், அவர்கள் இருவருக்கும் சண்டை அதிகமானது. அதில் கோபமடைந்த 13 வயது சிறுவன் வீட்டிற்கு சென்ற நிலையில் கத்தியை எடுத்து வந்து சேத்தனை பலமுறை குத்தியதால் வலி தாங்க முடியாமல் அலறிய சேத்தன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
அதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக சேத்தனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது பற்றிய தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சேத்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 13 வயது சிறுவன் சேத்தனை கத்தியால் குத்தியது தெரிய வந்ததால் அவனை கைது செய்த காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.