நடிகர் சந்தானம் நடிப்பில் நாளை மே 16ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில், 'கோவிந்தா... கோவிந்தா...' பாடல் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலில் இடம் பெற்றிருந்த சர்ச்சை வரிகளை நீக்க வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
நடிகர் சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, 'கோவிந்தா... கோவிந்தா...' பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பாடல், வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், பக்தி பாடலின் வரிகளை மாற்றி படத்துக்கு சம்பந்தமில்லாமல், வெங்கடேஸ்வரரை அவமதிக்கும் வகையில் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த பாடலை உடனடியாக நீக்கும்படி கூறாமல், திரைப்படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்சார் சான்றை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த பாடலுடன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் சர்ச்சை வரிகள் நீக்கப்படும்.
அந்த நேரத்தில் பாடல் மியூட் செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் படக்குழு உறுதி அளித்துள்ளது.