சோகம்... நிறைமாத கர்ப்பிணி பெண் மூளைச்சாவு... வயிற்றுள்ள குழந்தைக்காக வெண்டிலேட்டரில் வைத்திருக்கும் மருத்துவர்கள்!
Dinamaalai May 16, 2025 03:48 AM

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் வசித்து வருபவர்   30 வயதான அட்ரியானா ஸ்மித். இவர்  9ம் வார கர்ப்பமாக இருந்தபோது திடீரென கடும் தலைவலியால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு சோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை. வெறும்  மருந்துகள் கொடுத்து அனுப்பப்பட்டதாக தெரிகிறது.  

அடுத்த நாள்  அவர்  மூச்சுத்திணறலுடன், சிரமமாக உறங்கிக் கொண்டிருப்பதை அவரது காதலன் கவனித்து  உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.  அதன் பிறகு நடத்தப்பட்ட CT ஸ்கேன் மூலம் பலமான இரத்தக் கட்டிகள் மூளையில் காணப்பட்டது தெரிய வந்தது.

அதன்பின் அவசர அறுவை சிகிச்சைக்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டாலும், அதற்குள் கர்ப்பிணி பெண்  மூளைச்சாவு அடைந்தார். தற்போது அவர் 90 நாட்களுக்கும் மேலாக வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். ஜார்ஜியாவில் 6 வார கர்ப்பங்களுக்கு பிறகு கருக்கலைப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே ஸ்மித் மூளைச்சாவு அடைந்த பிறகும் கருவில் உள்ள குழந்தையை பாதுகாப்பதற்காக உயிருடன் வைத்திருந்தனர்.  லைப் சட்டத்தின் கீழ் குழந்தையை கலைக்கும் உரிமை வழங்க முடியாது என மருத்துவர்கள் ஸ்மித்தின் குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டனர்.

இந்நிலையில், அவரது தாய் நியூக்கிர்க், “என் மகள் மூச்சுவிடுகிறாள் போல் தெரிகிறாள், ஆனால் உண்மையில் அவர் இல்லை. அவருடைய மகன் இன்னும் அம்மா தூங்கிக்கொண்டிருக்கிறார் என நினைக்கிறார். இது நமக்குப் பொறுக்க முடியாத வேதனை. அவருடைய கருப்பையில் உள்ள குழந்தைக்கு பார்வையிழப்பு அல்லது பிற உடல் குறைபாடுகள் இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.  ஆனால் தீர்மானம் எங்களிடம் இருக்க வேண்டிய நேரத்தில் சட்டம் அதை மறுத்து வருகிறது” என தெரிவித்தார்.

மருத்துவர்கள் 32 வாரம் வரை கர்ப்பத்தை நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர். அதாவது இன்னும் 11 வாரங்கள் வரை ஸ்மித்தை உயிருடன் வைத்திருக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன் பின் குழந்தைக்கு கருப்பைக்கு வெளியே வாழும் திறன் பெற்றுவிடும் எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.  

“ஒவ்வொரு நாளும் செல்ல செல்ல அதிக செலவு, அதிக கேள்விகள் எழுகின்றன. இது போன்ற சமயங்களில் உயிரிழந்தவர்களின் துணைவர் அல்லது குடும்பத்தினர் அவர்களது உரிமையை எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். தற்போது கருவில் உள்ள குழந்தை எப்படி அதன் வாழ்க்கையை வாழும் என்பது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம். அந்தக் குழந்தையை வளர்ப்பதும் நாங்களே” என தனது வருத்தத்தை ஸ்மித்தின் தாய் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.