கர்நாடகா மாநிலத்தில் பெங்களூருவில் பல்வேறு உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள், வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டாய சர்வீஸ் சார்ஜை வசூலித்து வருகின்றன. அநியாமான அந்த நடைமுறையால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். குறிப்பாக, டெல்லி உயர்நீதிமன்றம் கூட “சர்வீஸ் சார்ஜ் என்பது வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு அமைவாக இருக்க வேண்டும்” என தெளிவாக கூறிவிட்டது. உணவகங்கள் அதை கட்டாயமாகக் கருதி பில்லில் சேர்த்து விடுகின்றன.
அதன்படி சமீபத்தில் பால் சார்ந்த பொருட்கள், குறிப்பாக கோவா, பன்னீர், நெய், வெண்ணெய் ஆகியவை கடுமையான விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.அந்த வகையில் தோசை, பன்னீர் பட்டியல் உணவுகள் உட்பட பலவகை சாப்பாடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதே நேரத்தில், சர்வீஸ் சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டி என 2 தனித்தனி கட்டணங்களும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாக மாறிவிட்டன.
இதனால் நடுத்தர மற்றும் குறைந்த வருமான மக்கள் உணவகத்தில் சாப்பிடுவது தற்போது பெரும் சவாலாக மாறி வருகிறது. மேலும் உணவகத்தில் விலை உயர்ந்திருக்கும் உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, ஆன்லைன் உணவுப் பொருள் விநியோக செயலிகளும் உணவுப் பொருட்களின் விலையையும் அதிகரித்து வருகின்றன.
ரூ.370 மதிப்புள்ள உணவு, டெலிவரி கட்டணம், பிளாட்ஃபார்ம் ஃபீஸ், மற்றும் பிற கட்டணங்களுடன் சேர்ந்து ரூ.460 ஆகி விடுகிறது. இதை ‘டிஜிட்டல் சுரண்டல்’ எனக் கூறும் மக்கள், உணவகங்கள் மற்றும் ஆன்லைன் ப்ளாட்ஃபாரங்கள் மீதான கண்காணிப்பை கடுமையாக்க வேண்டும். சட்டத்தை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.