தெலுங்கானாவின் முளுகு மாவட்டத்தில், போலீசாருடன் இணைந்து சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.கடந்த மாதம் 20ம் தேதி முதல், கடந்த 11ம் தேதி வரை நடந்த மெகா ஆப்பரேஷனில் 31 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்ட ரோலோ எனப்படும், 2 வயது பெண் நாய் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து துணை ராணுவப் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இரு மாநில எல்லையில், 21 நாட்கள் நடந்த தேடுதல் வேட்டையின் போது, கோர்கோடலு மலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலும் நக்சல்கள் வேட்டையாடப்பட்டனர். கொடூர விலங்குகள், தேனீக்கள் நிறைந்த பகுதியிலும் தேடுதல் பணி தொடர்ந்தது.
கடந்த 27ம் தேதி, தேடுதலின் போது, மலைப்பகுதியில் இருந்த தேனீக்கள் கூட்டமாக வந்து எங்களை தாக்கின.உடனடியாக எங்களை தற்காத்துக் கொண்டோம். எங்களுடன் வந்த ரோலோ என்ற நாயையும் தேனீக்கள் தாக்கின.பாலிதீன் கவரால் நாயை மூடிய நிலையிலும், அது தாக்குதலுக்கு உள்ளானது. 200க்கும் மேற்பட்ட தேனீக்கள் கொட்டியதில் காயம்அடைந்த நாய் இறந்தது.
நக்சல் தேடுதலின் போது, காடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஆயுதங்களை கண்டுபிடிக்க உதவியாக இருந்த ரோலோ உயிரிழந்தது எங்கள் குழுவுக்கு மிகப் பெரிய இழப்பாகும். இறந்த ரோலோவுக்கு மரணத்துக்கு பிறகான பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.