விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஆனந்த் பெருமாள்சாமி(33) என்பவர் துபாயில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பரில் அமீரகத்தில் லாட்டரி டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டதால் ஆனந்த் லாட்டரி டிக்கெட் வாங்க முடிவு செய்துள்ளார். ஆனால் ஒரு லாட்டரியின் விலை அதிகமாக இருந்ததால் பாலமுருகன் என்பவருடன் இணைந்து மொத்தம் 12 பேர் சேர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கினார்கள்.
15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு லாட்டரி டிக்கெட் என மாதத்திற்கு இரண்டு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி குலுக்கலை நேரலையில் பார்த்து வந்தனர். மேலும் ஆனந்த் செயலியிலும் தொடர்ந்து பார்த்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு தூங்க செல்வதற்கு முன் செயலியை பார்த்த ஆனந்த் மிகவும் சந்தோசம் அடைந்தார்.அதில் 12 பேர் கொண்ட குழுவாக வாங்கிய லாட்டரிக்கு 10 லட்சம் திர்ஹாம் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி 32 லட்சம் பரிசு தொகை ஆனந்த் பெயருக்கு விழுந்துள்ளது.
இதுகுறித்து ஆனந்த் பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த 2017-ம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறேன். தற்போது லாட்டரி குழுக்களில் வெற்றி பெற்றதை எண்ணி அன்று இரவும் அதற்கு மறுநாளும் எனக்கு தூக்கமே வரவில்லை. எனது நண்பர்களிடம் இதனை பற்றி கூறிய போது நான் காமெடி செய்கிறேன் என கூறினர். ஏனெனில் யாருக்கும் இதனை நம்ப முடியவில்லை.
மேலும் இந்த தொகையை 12 பேரும் சேர்ந்து பிரித்துக் கொள்ள இருக்கிறோம் அப்போது ஒவ்வொருவருக்கும் தலா 20 லட்சம் வரை கிடைக்கும். எனவே இந்த பணத்தை அடுத்த மாதம் எனக்கு நடக்கவிருக்கும் திருமணத்திற்காக செலவு செய்ய உள்ளேன். பின்னர் துபாயில் கார் ஓட்ட வேண்டும் என்பது என்னுடைய கனவு. அதற்காக அமீரக ஓட்டுனர் உரிமமும் பெற்றுள்ளேன். இப்போது என்னுடைய கனவும் நினைவாக போகிறது என ஆனந்த் கூறியுள்ளார்.