பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்காத அன்புமணி ...மனம் திறந்த ராமதாஸ்!
Dinamaalai May 16, 2025 08:48 PM

விழுப்புரம்  மாவட்டத்தில்  திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் 108 மாவட்டங்களைச் சேர்ந்த 216 தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் குறைவான நபர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

கட்சி வளர்ச்சி குறித்து விவாதிக்க நடத்தப்பட்ட இந்தக் கூட்டம், எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் பங்கேற்கவில்லை என தெரிகிறது.  அன்புமணி கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், பல மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவில்லை என்பது  அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. இதனால், கட்சிக்குள் உள் முரண்பாடுகள் இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன.


கூட்டத்தில் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, முகுந்தன் மற்றும் அவரது தாயார் காந்தி உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்துகொண்டனர். பங்கேற்பு குறைவாக இருந்தபோதிலும், கூட்டத்தில் கட்சி வளர்ச்சிக்கான சில முக்கிய விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.  
இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சி நிறுவனர் ராமதாஸ் ” கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. கூட்டத்திற்கு சிலர் வரவில்லை என்பதை பார்த்திருப்பீர்கள். மாநாட்டுக் களைப்பில் இருப்பதால் சிலர் கூட்டத்திற்கு வரவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.   ராமதாஸ்   இது குறித்து  ” சிங்கத்தின் கால்கள் பழுதாகாதபோது சீற்றம் இன்னும் அதிகமாகத் தானே இருக்கும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.


50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கான வித்தைகளை சொல்லிக் கொடுத்தேன் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக்கொள்வதற்கான கூட்டம் இது செயல்பட முடியவில்லை என யாரும் விருப்பம் தெரிவித்தால், விரும்பியபடி மாற்றப்படுவார்கள். தனியாக போட்டியிட்டாலும் 40 தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஆனால், நிச்சயமாக கூட்டணியுடன் தான் போட்டியிடுவோம்” எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.