கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு தினமும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து தினமும் மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணியளவில் தூத்துக்குடிக்கு சென்றடையும். இதுபோல் மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 12 மணிக்கு பாலக்காட்டிற்கு சென்றடையும். இந்த ரயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல் பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடிக்கு ரயில் புறப்பட்டது. ரயிலானது நேற்று அதிகாலையில் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் செங்கோட்டை அருகே உள்ள புனலூர் ரயில் நிலையம் நோக்கி சென்றுக் கொண்டு இருந்தது.
அப்போது அந்த ரயிலில் பொதுப்பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவரை ஒரு கும்பல் கீழே தள்ளிவிட்டு கொலை செய்ததாக பயணிகளிடையே பரபரப்பாக பேசப்பட்டது. இதுதொடர்பாக சிலர் புனலூர் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, புனலூர் ரயில் நிலையம் அருகில் இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புனலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து புனலூர் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போலீசார் ரயிலில் ஏறி பயணிகளிடமும், இறந்தவர் குறித்தும் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இவர் கேரள மாநிலம் செங்கனூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் விடுமுறைக்காக தனது ஊருக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டியில் பயணம் செய்தார்.
அதே பெட்டியில் தென்காசி பகுதியைச் சேர்ந்த 7 பேர் கும்பலும் பயணம் செய்தனர். அப்போது, அந்த கும்பலுக்கும், செந்தில்குமாருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் செந்தில்குமாரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை குறித்து 7 பயணிகளையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். செங்கோட்டை அருகே பாலருவி எக்ஸ்பிரசில் ஏற்பட்ட தகராறில் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி தூத்துக்குடி தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.