திருவண்ணாமலை மாவட்டத்தில் மகன் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வண்ணாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். அவரது மனைவி பேபி சரோஜா (80). இவர்களுக்கு ராஜன், ராஜேந்திரன் (55) என 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இதில் ராஜன், ராஜேந்திரன் ஆகியோர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றனர். அதன்பின்னர் ராஜேந்திரன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தினமும் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் சென்று வந்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேந்திரன் வேலைக்கு சென்றுவிட்டு காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பியபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்தார்.
உடனடியாக சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பேபி சரோஜாவும் திடீரென உயிரிழந்தார். மகன் இறந்த துக்கத்தில் தாயும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.