சந்தானம், யாஷிகா ஆனந்த், கீத்திகா திவாரி, கஸ்தூரி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படம் பற்றிய விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
நிழல்கள் ரவி – கஸ்தூரி தம்பதிகளின் மகனான சந்தானம் சினிமா ரிவ்யூ செய்பவர். ஏற்கனவே நகரில் சில சினிமா ரிவ்யூ செய்பவர்களை ஒரு அமானுஷ்ய சக்தி தியேட்டருக்கு சினிமா ரிவ்யூ செய்ய வரவைத்து பயப்பட வைக்கிறது. இவ்வாறு உண்மையிலேயே சினிமா ரிவ்யூ செய்யும் பிரசாந்தை சினிமா பாரடைஸ் என்ற தியேட்டருக்கு அழைத்து ரிவ்யூ செய்ய வரவைத்து அங்கே பயப்பட வைக்கிறது.
இதுபோல அழைப்பு சந்தானத்திற்கும் வருகிறது. எங்களது படத்தை ரிவ்யூ செய்ய வேண்டும், தியேட்டரில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்திருக்கிறோம் வந்து ரிவியூ செய்யுங்கள் உங்கள் குடும்பத்தோடு வாருங்கள் என ஒரு குரல் கேட்கிறது. அதைக் கேட்டு சந்தானமும் ரிவ்யூ செய்ய செல்கிறார். முதலில் அந்த தியேட்டருக்கு சென்று சந்தானம் பார்த்த நிலையில் அது ஒரு அமானுஷ்யமாக காட்சியளிக்க வீட்டுக்கு திரும்புகிறார்.
இதற்கிடையில், திரைப்படம் பார்க்க குடும்பத்தோடு கஸ்தூரி, நிழல்கள் ரவி, யாஷிகா ஆனந்த், கீர்த்திகா திவாரி என அனைவரும் செல்கின்றனர். அங்கு ஹிட்ச் காக் இருதயராஜ் என்ற பெயரில் ஒரு அமானுஷ்ய மனிதனாக செல்வராகவன் தென்படுகிறார்.
தியேட்டரைப் பார்த்து பயந்து சென்ற சந்தானம், தன் அம்மா, அப்பா, குடும்பத்தினர் தியேட்டருக்கு சென்றிருக்கிறார்கள் என தெரிந்து தியேட்டருக்கு ஓடி வருகிறார். அவர் வருவதற்குள் தியேட்டரில் அவர் அப்பா, அம்மா யாருமே இல்லை தியேட்டர்ல படம் மட்டும் ஓடிக் கொண்டிருக்கிறது.
திரையில் இருந்து அவரின் அம்மா, அப்பா போடும் சத்தம் கேட்கிறது. அப்போது திடீரென உதயமாகும் செல்வராகவன், ‘தியேட்டர் ஸ்கிரீனுக்குள் உங்க அம்மா, அப்பா இருக்காங்க நீயும் அந்த ஸ்கிரீனுக்குள்ளேயே போயிரு’ என தியேட்டரில் ஓடும் படத்தின் கதையின் உள்ளே அனைத்து கதாபாத்திரங்களுடன் பயணிப்பதாக சந்தானத்தை தியேட்டரில் படம் ஓடும் ஸ்கிரீனுக்குள் அனுப்புகிறார். அதாவது இது ஒரு புதுமையாக எடுக்கப்பட்டுள்ளது.
தியேட்டரில் படம் ஓடும்போது அந்த கதைக்குள் நாம் நுழைந்தால் எப்படி இருக்கும்? அதுபோல படம் எடுக்கப்பட்டுள்ளது. அப்படியாக படத்தின் கதையில் ஒரு கப்பல் சென்று கொண்டிருக்கிறது அந்தக் கப்பல் இயந்திரம் பழுதால் பக்கத்தில் உள்ள தீவில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்தப் பயணிகளை இறக்கி இளைப்பாற செய்கிறது. அந்த ஹோட்டல் ஒரு பழைய பங்களா, அதற்குள் சில அமானுஷ்ய சக்திகள் இருக்கிறது. அதில் சந்தானத்தின் காதலி வடிவிலும் அந்த அமானுஷ்ய சக்தி இருக்கிறது.
ஏற்கனவே திரைக்குள் சென்ற சந்தானத்தின் அம்மா, அப்பா அனைவரும் மாடர்னாக மாறி அந்த கதையில் உள்ளே வருகிறார்கள். சந்தானத்தை யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை, அந்த அமானுஷ்ய சக்திகள், அங்கே கொல்வதற்கு வரும் மனிதர்கள் இவர்களையெல்லாம் சமாளித்து வெளிவர வேண்டும் அது உன்னால் முடியாது என ஹிட்ச் காக் இருதயராஜ் என்ற அமானுஷ்ய கதாபாத்திரத்தில் வரும் செல்வராகவன் சந்தானத்திற்கு சவால் விடுகிறார். அந்த சவாலை ஏற்று சந்தானம் இந்த அமானுஷ்ய சக்திகள் ஆட்டத்திலிருந்து வெளியே வந்தாரா என்பது தான் கதை.
ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட அதே காட்சி அமைப்புகள், கடந்த பாகத்தில் இருந்தது போல நகைச்சுவைகள் இதில் இல்லை, பெரிதாக சிரிக்கும்படி எதுவும் இல்லை, மேலும் சந்தானம் எல்லா படத்திலும் எல்லோரையும் கலாய்த்து கொண்டே இருப்பார். இதில் சந்தானம் யாரையும் கலாய்க்கவில்லை குறிப்பாக கூடவே வரும் மொட்டை ராஜேந்திரனை எந்த இடத்திலும் சந்தானம் கலாய்க்கவில்லை.
பொறந்த வீடா புகுந்த வீடா என்ற திரைப்படத்தில் கவுண்டமணி செந்திலை அடிக்கவோ திட்டவோ மாட்டார். ஆனால் அவரின் மற்ற எல்லா படங்களிலும் கவுண்டமணி,செந்திலை அடித்துக் கொண்டு மிதித்துக் கொண்டே இருப்பார். இதுபோல காட்சியாகதான் சந்தானம் – மொட்டை ராஜேந்திரன் கூட்டணி அமைந்துள்ளது. இது ஆச்சரியமான விஷயமாக உள்ளது. இதுவே படத்தின் காமெடிக்கு வினையாகவும் உள்ளது. பார்த்து பழக்கப்பட்ட காட்சி அமைப்புகள் அதே காமெடிகள் இது போன்ற விஷயங்களை சந்தானம் விட்டுவிட்டால் நல்லது.
முதலில் இந்த தில்லுக்கு துட்டு சீரிசை விட்டுவிட்டு வேறு ஏதாவது கான்செப்ட் நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். இந்தப் படத்தில் ஹிட்ச் காக் இருதயராஜ் என்ற பெயரில் வரும் செல்வராகவன் கதாபாத்திரம் நன்றாக இருந்தது. அது ஒரு அமானுஷ்ய கதாபாத்திரமாக இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து படம் முழுவதும் கலாய்ப்பது போல, எடுத்திருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும். அதை விட்டுவிட்டு தியேட்டர் ஸ்கிரீனுக்குள் நடக்கும் கதையில் பயணிப்பது போல எடுத்தது ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவது போல் இருந்தது. இது டைம் மெஷின் கான்செப்ட் போல கொஞ்சம் குழப்பமாக இருந்தது. தியேட்டர் ஸ்கிரீனுக்குள் நடக்கும் கதையின் உள்ளே செல்வதே ஒரு வித்தியாசம் என்றால், அந்த கதைக்கும் உள்ளே சென்று வேறு வேறு காலகட்டத்தில் பயணிப்பது போல காண்பிப்பது எல்லாம் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
கௌதம் மேனனின் கதாபாத்திரம் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அந்த உயிரின் உயிரே பாடல் காட்சியில் கொஞ்சம் ரசிக்கும் படி இருந்தது. மொட்டை ராஜேந்திரன் காமெடி நன்றாக இருந்தது. அவருக்கு கொடுத்த பணியை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். இறுதியில் பரிதாபமான ஒரு காட்சியில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். படம் ஒருமுறை பார்க்கும் அளவுக்கு சுமாரான படம் தான்.
பொதுவாக சினிமா ரிவ்யூ செய்பவர்களை குறிப்பாக மோசமான சினிமா விமர்சகர்களை சினிமா உலகம் கழுவி ஊற்றும்.
இதில் சந்தானம் சினிமா விமர்சகர்களை மதித்து காட்சிகள் அமைத்திருக்கிறார்.யாரையும் கழுவி ஊற்றவில்லை. படம் நல்லா இருந்தா நாங்க நல்லா இருக்குன்னு சொல்ல போறோம் நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு சொல்ல போறோம் என்ற ரீதியில் வசனங்கள் எல்லாம் வைத்துள்ளார்.
ஒருமுறை பார்க்கும் அளவுக்கு சுமாரான படம் தான். இதில் இந்த படத்தின் அடுத்த பாகம் வர இருப்பதாய் இறுதியில் வருகிறது இந்த பாகத்தோடு நிறுத்திக் கொண்டாலே போதும்.