இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்... காஸாவில் ஒரே நாளில் 93 பேர் பலி!
Dinamaalai May 17, 2025 11:48 AM

இஸ்ரேல் தொடர்ந்து காஸாவின் மீது நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 93 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

காஸாவின் தெயிர் அல்-பலா மற்றும் கான்யூனிஸ் ஆகிய பகுதிகளின் மீது கடந்த மே 15ம் தேதி நள்ளிரவு துவங்கிய இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்கள் நேற்று வரையில் தொடர்ந்து நடைபெற்றன. இந்தத் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் காஸாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் மேற்கொண்ட அரசு முறைப் பயணங்கள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

ஜபாலியா அகதிகள் முகாம் மற்றும் பெயிட் லஹியா நகரத்தில் நேற்று பல மணி நேரமாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளன. இது குறித்து வெளியான வீடியோக்களில், தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் கரும்புகைகள் பரவியுள்ளதும், அங்குள்ள மக்கள் தங்களது உடைமைகளுடன் நடந்தும், வாகனங்கள் மற்றும் கழுதை வண்டிகள் மூலமாகவும் அங்கிருந்து இடம்பெயர்வது பதிவு செய்யப்பட்டுள்ளன.

காஸா பகுதிகளைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் கிளர்ச்சிப்படையினரை முற்றிலும் அழிப்பதற்காக அந்நகரத்தின் மீதான தங்களது தாக்குதல்களை மேலும் அதிகரிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.

கடந்த 2023-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் காஸவின் மீதான இஸ்ரேலின் போரில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 53,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இருப்பினும், போரின் துவக்கத்தில் ஹமாஸ் படையினர் சிறைப்பிடித்த 250 இஸ்ரேலியப் பிணைக் கைதிகளில், 58 பேர் தற்போது வரை அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.