தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கண்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று முன்தினம் காலையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளித்த டாக்டர் கண்ணன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மேலும் பிற டாக்டர்களிடமும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து டாக்டர் கண்ணனுக்கு பதிலாக மாற்று டாக்டர் நியமிக்கப்பட்டு புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில், டாக்டர் கண்ணனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் டாக்டர் கண்ணனை பணி இடைநீக்கம் செய்து சென்னை மருத்துவக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டார்.