சென்னை எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணை நடத்த தடை கோரி தமிழக அரசு சார்பிலும், ‘டாஸ்மாக்' நிர்வாகம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு கோர்ட்டு தடை விதிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். ‘டாஸ்மாக்' மேலாண்மை இயக்குனர் விசாகன் சென்னை மணப்பாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவருடைய வீட்டுக்கு காலை 7 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர் சென்றனர்.
உடனடியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விசாகன் வீட்டில் இல்லை. அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மட்டும் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் சோதனை நடந்தது. வெளியே சென்றிருந்த விசாகனும் சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்தார். இதையடுத்து அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே இன்னொரு அதிரச்சி சம்பவம் அரங்கேறியது. விசாகன் வீட்டுக்கு பின்பக்கத்தில் ‘டாஸ்மாக்' டெண்டர் தொடர்பான ஆவணத்தின் நகல்கள் கிடந்தன. அவை சோதனை நடந்தபோது விசாகன் வீட்டில் இருந்து வெளியே வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை கண்டுபிடித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே சிதறி கிடந்த ஆவணங்களை சேகரித்து எடுத்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று பகல் 3 மணியளவில் விசாகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் காரில் ஏற்றி அழைத்து சென்றனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றதாக தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் மேலும் 7 இடங்களில் நேற்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். தியாகராயநகரில் வசிக்கும் கேசவன் வீடு, சூளைமேடு ராஜா வீதியில் உள்ள மேகநாதன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இவர் மதுபான ஆலை நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இதேபோல பிரபல சினிமா பட அதிபர் ஆகாஷ் வசிக்கும் தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆகாஷ் பிரபல நடிகர்கள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
தொடர்ந்து புதிய திரைப்படங்களை தயாரித்து வருகிறார். பெசன்ட்நகர் கற்பகம் கார்டன் 2-வது தெருவில் வசிக்கும் ராஜேஷ்குமார் என்பவரது வீடும் இந்த சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. இவர் மின்சார வாரிய ஒப்பந்ததாரராக இருக்கிறார். ராயப்பேட்டை கிளப் ஹவுஸ் சாலையில் உள்ள தொழிலதிபர் தேவகுமார் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென்று புகுந்து சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை நடந்தது. சேத்துப்பட்டு ஜெகநாதபுரத்தில் வசிக்கும் பாபு, குமரன் காலனியில் வசிக்கும் இந்திரஜித் ஆகியோரது வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
‘டாஸ்மாக்' மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் நடந்த சோதனைக்கும், மற்ற 7 இடங்களில் நடந்த சோதனைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுபற்றி அமலாக்கத்துறை சார்பில் அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பான சோதனை முற்றிலும் நிறைவடைந்த பின்னர் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடப்படும் என அமலாகத்துறை தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 8.45 மணியளவில் விசாரணை முடிவடைந்து விசாகன் அமலாக்கத்துறை அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தார். 5 மணி நேர விசாரணைக்குப் பின் அவரை ஏற்றி செல்வதற்காக அவர் பயன்படுத்தும் அரசு கார் வெளியே தயாராக இருந்தது. ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த காரில் செல்ல அனுமதிக்கவில்லை. மீண்டும் தங்களுடைய காரில் ஏற்றி விசாகனை அவரது வீட்டில் கொண்டு விட்டனர்.