நாடு முழுவதும் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே, பர்தேஷிவாடா பகுதியில் அமைந்துள்ள ஒரு தெருவில் பசு மாடு நின்று கொண்டிருந்தது. திடீரென எங்கிருந்தோ வந்த தெரு நாய்கள் கூட்டம் அதனை துரத்த தொடங்கியது.
இதனால் பயந்து போன பசுமாடு அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் மர படிக்கட்டுகள் மூலம் ஏறி 3 வது மாடிக்கு சென்று விட்டது. இதனை பார்த்த அந்தப் பகுதி மக்கள் 3 வது மடியில் இருந்த பசுமாட்டை கீழே இறக்க முயற்சி செய்தனர்.
பயத்தில் அது கீழே வர மறுத்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பசுவை மீட்பதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டனர். இதனையடுத்து பாதுகாப்பு பெல்ட்களைப் பயன்படுத்தி கிரேன் மூலம் பசுவை மாடியில் இருந்து கீழே இறக்கினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.