தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து புளியம்பட்டி, கடம்பூர், பசுவந்தனை, ஓட்டப்பிடாரம் வழியாக தூத்துக்குடிக்கு ஒரு அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். பேருந்தில் கழுகுமலை கரடிகுளத்தைச் சேர்ந்த குருசாமி மகன் சந்திரசேகர் (58) என்பவர் டிரைவராகவும், கோவில்பட்டி வில்லிசேரியைச் சேர்ந்த வேலன் மகன் காந்தி ராஜ் (37) என்பவர் கண்டக்டர் ஆகவும் வந்தனர்.
மணியாச்சி அருகே மருதன்வாழ்வு கிராமத்தில் பேருந்து பயணிகளை ஏற்றிவிட்டு மீண்டும், பேருந்தை எடுக்கும் போது மருதன்வாழ்வு கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கந்தன் மனைவி பாப்பா (90) என்பவர் பின்னால் இருந்து பேருந்தில் ஏற முயன்றதாக தெரிகிறது. அப்போது அவர் நிலை தடுமாறி விழுந்தார். அப்போது பேருந்தின் பின் சக்கரம் அவரது வலது கால் மீது ஏறி இறங்கியது. இதில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாரைகிணறு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே பேருந்து மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் ஆனது. பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.