தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கிராமத்தில் உள்ள தம்புராட்டி அம்மன் கோவிலில் கடந்த 13ம் தேதி இரவு கோவில் கொடை விழா நடந்தது. இந்த விழாவில் நேற்று காலை பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். மதியம் அனைவருக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இதில் அசைவ விருந்து சாப்பிட்ட 9 பேருக்கு திடீரென வாந்தி பேதி ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 பெண்கள் உட்பட 6பேர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 3பேர் வீடு திரும்பினார்கள். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சுகாதார அதிகாரிகள் டாக்டர்கள் வீடு வீடாக சோதனை செய்ததில் ஆட்டு இறைச்சி ஜீரணமாகாமல் வாந்தி பேதி ஏற்பட்டதாகவும், வல்லநாடு கிராமத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி 15 தினங்களுக்கு ஒருமுறை குற்றம் செய்யப்படுவதால் தண்ணீரில் எந்த குறைபாடும் இல்லை என்றும் தெரிவித்தனர்.