ஆபரேஷன் சிந்தூர் நிறைவடையவில்லை: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!
Top Tamil News May 18, 2025 01:48 PM

பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் அதிதீவிர போர் நடைபெற்றது. பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று கடந்த 10-ம் தேதி சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. பாகிஸ்தானுடனான போரின்போது குஜராத்தின் புஜ் நகரில் உள்ள விமான படைத் தளம் மிக முக்கிய பங்காற்றியது. அந்த விமான படைத் தளத்துக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சென்றார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 1965-ம் ஆண்டு போர், கடந்த 1971-ம் ஆண்டு போரின்போது புஜ் விமான படைத் தளம் மிக முக்கிய பங்கு வகித்தது. தற்போதைய போரிலும் இந்த விமானப்படைத் தளம் வெற்றிக்கு வித்திட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஆபரேஷன் சிந்தூரை வெற்றி பெறச் செய்த முப்படைகளின் வீரர்களுக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன்.

இந்திய விமானப் படை மீண்டும் தனது வீரத்தை மீண்டும் நிரூபித்து இருக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், அந்த நாட்டின் விமான படைத் தளங்களை இந்திய போர் விமானங்கள் துல்லிய தாக்குதல்கள் மூலம் அழித்தன. இந்திய விமானப் படையின் திறனை பார்த்து ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்திருக்கிறது. பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழையாமல் அந்த நாட்டின் எந்த மூலையையும் தாக்கும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது.

பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமையை பாகிஸ்தான் நேரடியாக உணர்ந்துவிட்டது. 23 நிமிடங்களில் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. இது இந்தியாவின் வீரத்தையும் வலிமையையும் வெளிப்படுத்தியது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்களை மட்டுமே நாம் சார்ந்து இருக்கவில்லை. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள், ரேடார்கள் உள்ளிட்டவை மிகச் சிறப்பாக செயல்பட்டன. இதற்காக டிஆர்டிஓ அமைப்புக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை நிறைவடையவில்லை. தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம். பாகிஸ்தானின் செயல்பாடுகளை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தானுக்கு நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது. இந்த நிதியை தீவிரவாத அமைப்புகளுக்காக பாகிஸ்தான் அரசு செலவிடும். தற்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு ரூ.14 கோடியை வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருக்கிறது. இந்தியாவால் அழிக்கப்பட்ட தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு மீண்டும் கட்டி எழுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் முடிவை ஐஎம்எப் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். இந்த நிகழ்ச்சியில் விமான படைத் தளபதி ஏ.பி.சிங் மற்றும் மூத்த தளபதிகள் உடன் இருந்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.