நீங்க இப்படி பேசுவீங்கன்னு நினைக்கல… “நயினார் நாகேந்திரனுக்குள் இது புகுந்து விட்டது”… அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்…!!
SeithiSolai Tamil May 18, 2025 05:48 PM

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி விழாவின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்போர் தமிழர் என சொல்ல அருகதை அற்றவர்கள். தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள். காங்கிரஸ் கட்சியின் முதல்வர் கூட பாகிஸ்தானை எதிர்க்கிறார். ஆனால் நம் முதல்வர் எதையுமே கூறவில்லை எனக் கூறியிருந்தார். இதனை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் நயினார் நாகேந்திரனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிடுள்ள பதிவில், நயினார் நாகேந்திரன் இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். பாஜக தலைவர் ஆனதும் சாதி வெறியும், மத வெறியும் அவருள் குடிபெயர்ந்துள்ளது. இதனால் வெளிப்படையாகவே தொடர்ந்து வெறுப்பரசியல் பேசி வருகிறார். இதனால் அவருக்கான அடையாளத்தை நயினார் இழந்து விட்டார். 1500 ஆண்டுகள் இந்திய மண்ணை ஆக்கிரமித்திருந்த மனுஸ்மிருதியும், பாஜகவின் மூதாதையர்களான இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவெறி அமைப்புகளின் இந்து ராஷ்ட்ரா முழக்கமும் தான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம். பிரிட்டிஷாரிடம் ஓய்வூதியம் வாங்கிக் கொண்டு தங்கள் வயிற்று பிழைப்பை ஆற்றியவர்களின் வாரிசுகள், நாட்டுப்பற்று குறித்து பேசுவது, “சாத்தான் வேதம் ஓதும்” கதை. தேசப்பிதாவை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளின் வாரிசுகள் தேசப்பற்று குறித்து வாய் திறக்கலாமா?

 

சுமார் 1500 ஆண்டுகள் இந்தியாவின் 80 சதவீதம் மக்களை மாடுகளாகக் கூட மதிக்காமல் மனுஸ்மிருதி என்னும் கொடிய நச்சுப்பாம்பை உலாவவிட்டு, பாமர மக்களின் இரத்ததை உறிஞ்சி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கோழைகளின் வழியை பின்பற்றுபவர்களுக்கு திடீர் மக்கள் பற்றும், நாட்டுப் பற்றும் வருவது – Patriotism is the last refuge for a Scoundrel என்பதை தெளிவுபடுத்துகிறது. பிரிட்டிஷாரின் கால்பாதம் தொட்டு தவழ்ந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சிறையில் இருந்து வெளிவந்த தங்களின் கொள்கை மூதாதையர்கள் வழியில் வந்தவர்கள், இப்போது அமெரிக்க அதிபரின் அடிவருடிகளாக மாறி, நாட்டின் இறையாண்மையை கேலிக்கூத்தாக்கி உள்ளது, ஒட்டுமொத்த இந்தியர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.