பாகிஸ்தானுக்கு உளவு தகவல்கள் வழங்கியதாக பஞ்சாப் மற்றும் ஹரியாணா காவல்துறையினர் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹரியாணாவைச் சேர்ந்த யூட்யூபரான ஜோதி மல்ஹோத்ரா, பஞ்சாபின் கைதால் மாவட்டத்தில் உள்ள மஸ்த்கர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான தேவேந்திர சிங் மற்றும் மலேர்கோட்லாவைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண் ஆவர்.
ஜோதிக்கு ஐந்து நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. இருமாநில காவல்துறையினரும் தெரிவித்துள்ள தகவல்களின்படி இவர்கள் சில பாகிஸ்தான் அதிகாரிகள் உடன் தொடர்பில் இருந்ததாகவும் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான தகவல்களைப் பகிர்ந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?ஜோதி மல்ஹோத்ரா ஒரு ட்ராவல் வ்ளாக்கர். 'ட்ராவல் வித் ஜோ' என்கிற யூ-ட்யூப் சேனலை நடத்தி வருகிறார்.
பல்வேறு நாடுகளில் இருந்து பயண வீடியோக்களை தன்னுடைய யூட்யூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அதில் பாகிஸ்தான் சென்று வந்தது பற்றியும் பல காணொளிகளைப் பதிவிட்டுள்ளார்.
"எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் மற்றும் பி.என்.எஸ் பிரிவு 152 ஆகியவற்றின் கீழ் ஜோதி மல்ஹோத்ராவை கைது செய்துள்ளோம்" என ஹிசார் மாவட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் கமல்ஜித் தெரிவித்துள்ளார் என்கிறார் பிபிசி செய்தியாளர் கமல் சைனி
அவரின் கைப்பேசி மற்றும் மடிக்கணினியில் சில சந்தேகத்திற்குரிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் ,"ஜோதி மல்ஹோத்ராவை ஐந்து நாட்கள் காவலில் எடுத்துள்ளோம், விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அதைப் பற்றியும் தகவல்கள் திரட்டப்படும்" என்றார் துணை காவல் கண்காணிப்பாளர் கமல்ஜித்
காவல்துறையினர் வியாழக்கிழமை காலை 09:30 மணிக்கு தங்களின் வீட்டிற்கு வந்து ஜோதியை அழைத்துச் சென்றதாக அவரின் தந்தை ஹரித் குமார் தெரிவிக்கிறார்.
மேலும் அவர் பேசுகையில், "ஐந்து, ஆறு பேர் வந்தார்கள். அரை மணி நேரம் வீடு முழுக்க தேடினார்கள். அதன் பின்னர் காவல்துறையினர் ஒரு மடிக்கணினி மற்றும் மூன்று கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனர்," என்றார்.
ஜோதி ஒரு முறை மட்டும் தான் பாகிஸ்தான் சென்றதாகக் கூறும் ஹரிஷ் குமார், "என் மகள் அரசாங்கத்தின் அனுமதியுடன் தான் சென்றார். அவர் சோதனை செய்யப்பட்டு தான் விசா வழங்கப்பட்டது. அதன் பின்னர் தான் பாகிஸ்தான் சென்றார்." எனக் கூறினார்.
தன் மகள் ஜோதி நடத்தி வரும் யூட்யூப் சேனல் பற்றி தனக்கு தெரியாது எனக் கூறுகிறார் ஹரிஷ் குமார்.
ஹரியாணாகாவல்துறையின் சிறப்பு உளவுப் பிரிவு கைதாலில் மஸ்த்கர் கிராமவாசியான, தேவேந்திர சிங்கை (25 வயது) பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்த குற்றச்சாட்டிற்காக கைது செய்துள்ளனர்.
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட ரகசிய ராணுவத் தகவல்களை அனுப்பியதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது என துணை காவல் கண்காணிப்பாளர் வீர்பன் சிங் தெரிவித்துள்ளார்.
தேவேந்திர சிங் ஏற்கெனவே கடந்த மே 13ம் தேதி சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டிருந்தார் என வீர்பன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை உறுதி செய்த டிஎஸ்பி வீர்பன் கூறுகையில், "குற்றம்சாட்டப்பட்டுள்ள தேவேந்திர சிங் கர்தார்பூர் சாகிப் குருத்வாராவிற்குச் செல்வதாகக் கூறிக் கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா திரும்பிய பின் ராணுவம் தொடர்பாக முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிவந்துள்ளார்" என்றார்.
பாட்டியாலாவில் படித்து வந்த தேவேந்திர சிங் ராணுவ பகுதிகளை தன்னுடைய கைப்பேசியில் புகைப்படம் எடுத்து ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்களுக்கு அதை அனுப்பியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவரின் கைப்பேசி மற்றும் இதர சாதனங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அடுத்தக்கட்ட விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர்.
கடந்த மே 11ம் தேதி பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரியிடம் தகவல்களைக் கசியவிட்ட ஒரு பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாகக் கூறுகிறார் பிபிசி செய்தியாளர் சரண்ஜீவ் கௌஷல்.
பஞ்சாப் காவல்துறை தலைவர் கௌரவ் யாதவ் எக்ஸ் தளத்தில் இந்தத் தகவலை தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் மலேர்கோட்லாவைச் சேர்ந்த குஜாலா மற்றும் யாசின் முகம்மது என அறியப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து இரண்டு கைப்பேசிகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர் என கௌரவ் யாதவ்கூறியுள்ளார்.
மேலும் அவர், "முதல் கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் ரகசிய தகவல்களைப் பகிர்ந்ததற்காக இணைய வழியில் பணம் பெற்றுள்ளனர். இருவரும் அவர்களுடைய ஆபரேட்டர் உடன் தொடர்பில் இருந்து, அவர்களின் உத்தரவுபடி உள்ளூர் ஆபரேட்டர்களுக்கு பணம் அனுப்பி வந்துள்ளனர்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு