திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த தர்மபுரி கிராமத்தில் வசித்து வருபவர் டாக்சி டிரைவர் சூரிய நாராயணன். இவரது மனைவி புஸ்பலதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள்.இதில் இளைய மகன் 17 வயது யோகபாபு.
இவர் அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் நேற்று வெளியான 11ம் வகுப்பு தேர்வு முடிவில் யோகபாபு 273/600 மதிப்பெண்கள் எடுத்தும், வணிகவியல் பாடத்தில் தோல்வி அடைந்தார். இதனால் விரக்தி அடைந்து மனம் உடைந்து காணப்பட்ட யோகபாபு நேற்று மாலை கொடைரோடு அருகே திண்டுக்கலில் இருந்து மதுரை மார்க்கமாக சென்ற தேஜஸ் ரயிலின் முன் பாய்ந்து உயிரை விட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடைரோடு இருப்பு பாதை காவல் துறை சார்பு ஆய்வாளர் அருணோதயம், யோகபாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் வழக்குப் பதிவு செய்து, மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.