கொச்சியில் பணிபுரிந்தவரை தொலைதூர தீவில் தனித்துவிட்ட டச்சு கிழக்கிந்திய கம்பெனி - என்ன ஆனார்?
BBC Tamil May 18, 2025 02:48 PM
Brugmans/Zeemansleven சித்தரிப்புப் படம்

இன்றும் 64 நாடுகளில் தன்பாலீன ஈர்ப்பு உறவுகளைக் கொண்டிருப்பது குற்றமாக கருதப்படுகிறது. அபராதம் முதல் மரண தண்டனை வரை பல்வேறு தண்டனைகள் இதற்காக வழங்கப்படுகிறது என்று கூறுகிறது சர்வதேச லெஸ்பியன், கே, பைசெக்சுவல், ட்ரான்ஸ் அண்ட் இண்டெர்செக்ஸ் பிரிவினருக்கான சங்கம் (International Lesbian, Gay, Bisexual, Trans and Intersex Association (ILGA)).

கடந்த நூற்றாண்டுகளில் இவர்களுக்கான தண்டனைகள் மிகவும் கொடூரமானதாக இருந்தன.

நெதர்லாந்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனை அதில் முக்கியமான ஒன்று.

18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அவர் தீவு ஒன்றில் தனித்துவிடப்பட்டார். இரண்டு வரலாற்றாசிரியர்கள் அந்த நபரைப் பற்றிய விபரங்களை ஆய்வு செய்யாமல் இருந்திருந்தால் அந்த நபர் குறித்தும், அவருக்கு ஏற்பட்ட நிலை குறித்தும் யாரும் அறிந்திருக்கவே முடியாது.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு, அட்லாண்டிக்கில் அமைந்துள்ள அசென்சன் தீவில் தனித்துவிடப்பட்டது குறித்து லீண்டெர்ட் ஹாசென்போஸ்க், "இன்று சனிக்கிழமை. 1725-ஆம் ஆண்டு மே 5. டச்சு கப்பல் ஒன்றின் தளபதி மற்றும் கேப்டன்களின் ஆணைக்கு இணங்க, லீண்டெர்ட் ஹாசென்போஸ்க் ஆகிய நான், இந்த தனித்தீவில் என்னுடைய பெருந்துயரை ஆரம்பிக்கிறேன்." என எழுதியுள்ளார்

அட்லாண்டிக்கில் எரிமலை ஒன்றுக்கு அருகே அமைந்துள்ள ஒரு சிறு தீவு அது. ஆப்பிரிக்க கடற்கரைகளில் இருந்து 1540 கி.மீ தொலைவிலும், தென் அமெரிக்காவில் இருந்து 2300 கி.மீ தொலைவிலும் அது அமைந்திருந்தது.

அவரைப் பற்றிய தகவல்களை வரலாற்று ஆய்வாளர்கள் திரட்ட ஆரம்பிக்கும் வரை பல ஆண்டுகளாக அவருடைய கதை வரலாற்றில் புதைந்து கிடந்தது.

18-ஆம் நூற்றாண்டில் கப்பல் விபத்துகளில் சிக்கி தீவுகளில் தனியாக தவிக்கும் நபர்களைப் பற்றிய கதைகள் மிகவும் பிரபலமானவை.

ஹாசென்போஸ்க் தீவில் தனித்து விடப்படுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, உண்மை சம்பவத்தை தழுவி டேனியல் டெஃபோ எழுதிய ராபின்சனின் க்ரூசோ (Robinson Crusoe) என்ற புதினம் வாசகர்களின் மனதில் இடம் பெற்றது.

ஆனால் ஹாசென்போஸ்கின் விதி விசித்திரமானது. விபத்தின் காரணமாக அசென்சன் தீவுக்கு அவர் செல்லவில்லை. தன்பாலின ஈர்ப்பை குற்றமாக கருதிய கால கட்டத்தில், அவருடைய செயல்பாட்டின் காரணமாக, வேண்டுமென்றே அத்தீவில் தனித்துவிடப்பட்டார்.

Getty Images 18-ஆம் நூற்றாண்டில் வெளியான ரோபின்சன் க்ரூசோ புதினம் மிகவும் பிரபலமானது தீவுக்கு சென்ற மாலுமிகள்

1726-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டிஷ் மாலுமிகள் குழு ஒன்று அசென்சன் தீவுக்கு சென்றது. அங்கே ஒரு கூடாரத்தை அவர்கள் கண்டனர். உள்ளே சென்று பார்த்த போது அங்கே ஒரு நாட்குறிப்பு இருந்தது. ஆனால் அதை எழுதிய நபரின் தடமே அங்கு இல்லை. அந்த ஆண்டு தான் ஹாசென்போஸ்க் பற்றிய தகவல் முதன்முறையாக வெளிவரத்துவங்கியது.

அந்த நாட்குறிப்பு பிரிட்டனுக்கு எடுத்துவரப்பட்டது. அங்கே அந்த நாட்குறிப்பு மொழி பெயர்க்கப்பட்டு பரபரப்பான சில பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டது. இதைத்தழுவித் தான் சோடோமி பனிஷ்ட் (Sodomy Punished) என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்த படைப்புகள் அனைத்தும் ஹாசென்போஸ்க் பட்ட துயரங்களின் சில பகுதியை உள்ளடக்கியிருந்தாலும், பெயரற்ற, மக்கள் மத்தியில் ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தும் பிம்பமாக மாற்றப்பட்டார்.

லீண்டெர்ட் ஹாசென்போஸ்க் தி ஹாகில் 1695-ஆம் நெதர்லாந்தில் ஆண்டு பிறந்தார்.

ஹாசென்போஸ்கின் தாய் இறந்த பிறகு , அவரின் குடும்பம் பட்டாவியாவுக்கு (இன்றைய ஜகார்த்தா) குடி பெயர்ந்தது. ஹாசென்போஸ்க் பதின் பருவத்தில் மற்றவர்களைக் காட்டிலும் பின் தங்கியிருந்தார்.

18 வயதில் அவர் டச்சு கிழக்கிந்திய கம்பெனியில் படை வீரராக பணியில் சேர்ந்தார். பிறகு அவர் கணக்கராக பதவி உயர்வு பெற்றார்.

டச்சு கிழக்கிந்திய கம்பெனி, உலகின் முதல் பன்னாட்டு நிறுவனம் என்று பலராலும் அழைக்கப்பட்டது. ஆசியாவின் பெரும்பான்மையான பகுதியில் வர்த்தக தொடர்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதன் பணியாளர்கள் மோசமான சூழல்களை எதிர்கொள்ள நேரிட்டது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்காக பட்டாவியாவிலும் கொச்சியிலும் ஹாசென்போஸ்க் பணியாற்றினார்.

பிறகு அவர் 1724-ஆம் ஆண்டு அக்டோபரில் தன்னுடைய தாய்நாடான நெதர்லாந்திற்கு செல்ல கடலில் பயணமானார். ஆனால் அவருடைய தாய்நாட்டை அவரால் பார்க்கவே இயலவில்லை.

Getty Images அட்லாண்டிக்கில் அமைந்துள்ள அசென்சன் தீவு உணவுக்கு ஆமை இறைச்சி

பயணத்தின் ஏதோ ஒரு கட்டத்தில், ஒரு ஆணுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டிருக்கிறார் ஹாசென்போஸ்க். இத்தகைய ஈடுபாடு கடுமையான குற்றங்களில் ஒன்றாக கருதப்பட்ட காலம் அது.

டச்சு கிழக்கிந்திய கம்பெனியில், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மரண தண்டனையே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஹாசென்போஸ்க் விவகாரத்தில் யாராலும் அணுக முடியாத இடத்தில் தனித்துவிடப்படுதல் தண்டனையாக வழங்கப்பட்டது.

1725-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி அன்று அசென்சன் தீவில் ஹாசென்போஸ்க் தனித்துவிடப்பட்டார். அவரிடம் ஒரு கூடாரம், ஒரு பைபிள், சில விதைகள் மற்றும் பீப்பாயில் கொஞ்சம் தண்ணீர் மட்டுமே இருந்தது.

முதல் மாதத்தில் அந்த தீவில் குடிநீரைத் தேடி அலைந்தார். மீட்க யாராவது வர வேண்டும் என்று வேண்டினார். அவரின் தனிமை, தாங்கிக் கொள்ள இயலாததாக இருந்தது. ஒரு பறவையை துணையாக்கிக் கொள்ள முயன்றார். ஆனால் அது இறந்து போனது.

வெங்காயம், பட்டாணி, பீன்ஸ் போன்றவற்றை நடவு செய்தார். ஆனால் அந்த கடற்கரை மண்ணில் எதுவும் வளரவில்லை.

ஜூன் மாதத்தின் போது மாயக்காட்சிகளை காண ஆரம்பித்தார். கற்பனை மற்றும் குற்ற உணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். எனக்கு தெரிந்த ஒரு மனிதர் ஒருவர் என்னுடன் சில காலம் தங்கினார் என்று தன்னுடைய நாட்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதை ஹாசென்போஸ்க் தான் எழுதினாரா அல்லது அவரின் கதைக்கு சுவாரசியம் தருவதற்காக ஆங்கில ஆசிரியர்கள் இதனை இணைத்தார்களா என்பதில் தெளிவில்லை.

அந்த தீவில் இருந்த ஒரே ஒரு நன்னீர் ஆதாரமான டாம்பியர்ஸ் ட்ரிப் வறண்டு கிடந்ததால் குடிநீர் இல்லாமல் பலவீனமானார் ஹாசென்போஸ்க். பயிர்களை எலிகளும் ஆடுகளும் மோசம் செய்தன. பலவீனமாக இருந்ததால் அவரால் அவற்றை பிடிக்க இயலவில்லை. பிறகு மோசமான நாட்களை அவர் சந்திக்க நேரிட்டது.

தன்னுடைய நாட்குறிப்பில், "ஆகஸ்ட் 22: நான் மிகப்பெரிய ஆமை ஒன்றை பிடித்தேன். அதன் ரத்தத்தை நான் குடித்துவிட்டேன். என்னுடைய சிறுநீரையும் குடித்தேன்," என்று எழுதியுள்ளார்.

அக்டோபரில் அவர் உயிர் ஊசலாடத் துவங்கியது. ஆமையின் இறைச்சி, ரத்தம் மற்றும் சிறுநீரைக் கொண்டு உயிர்வாழ்ந்தார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி அன்று அவர் இறுதியாக தன்னுடைய நாட்குறிப்பில், "முன்பைப் போன்றே நான் வாழ்ந்தேன்," என்று மட்டும் எழுதியிருந்தார்.

DEA / BIBLIOTECA AMBROSIANA இறைச்சித் தேவைக்காக அசென்சன் தீவில் நூற்றுக்கணக்கான ஆமைகளை பிடித்தனர் மாலுமிகள் தெரிய வந்த வரலாறு

இரண்டு நூற்றாண்டுகளாக ஹாசென்போஸ்க்கின் கதை அறைகுறையாக நினைவுகூறப்பட்டது. ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்ட சோடோமி பனிஷ்ட் (1726), ஆன் அதெண்டிக் ரெலேஷன் (1728) ஹாசென்போஸ்க்கின் துயரங்களை பட்டியலிட்டிருந்தது. ஆனால் அவரின் அடையாளம் முழுமையாக நீக்கப்பட்டிருந்தது.

1990-களில் ஆம்ஸ்டர்டாம் கடல்சார் அருங்காட்சியகத்திற்கு சென்ற டச்சு வரலாற்று ஆய்வாளர் மைக்கேல் கூல்பெர்கன், ஆங்கிலத்தில் வெளியான ஆன் அதெண்டிக் ரிலேஷன் என்ற புத்தகத்தை பார்த்தார்.

'ராபின்சன் க்ரூசோ' புதினத்தில் நிகழ்ந்ததைப் போன்று நிஜ வாழ்க்கையில் தனித்துவிடப்பட்ட ஒருவரின் கதை அதில் கூறப்பட்டிருந்தது. தன்பாலின ஈர்ப்பாளராக இருந்த காரணத்திற்காக அந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த புத்தகத்தைப் பார்த்து ஆர்வம் அடைந்த மைக்கேல், டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களைத் தேடினார். அங்கே அவர் ஹாசென்போஸ்க்கின் பெயரைக் கண்டுபிடித்தார்.

மேலும் சம்பள பதிவேட்டையும் அவர் பார்வையிட்டார். அது அவருக்கு நேர்ந்த கதியை உறுதி செய்தது.

"ஏப்ரல் 17, 1925 அன்று, அசென்சன் அல்லது வேறேதாவது தீவில் தனித்துவிட வேண்டும் என்று பிராட்டென்பர்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. மேலும் அவரின் சம்பளம் பறிமுதல் செய்யப்பட வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை மைக்கேல், 2002-ஆம் ஆண்டு 'ஆன் ஹோலாண்ட்சே ரோபின்சன் க்ரூசோ' (ஒரு டச்சு ரோபின்சன் க்ரூசோ) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் புத்தகம் வெளியாவதற்கு முன்னதாகவே புற்றுநோயால் அவர் காலமானார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான அலெக்ஸ் ரிட்ஸெமா மைக்கேலின் ஆராய்ச்சி குறித்து அறிந்து கொண்டார்.

தீவுகளின் வரலாறு குறித்து ஆய்வு செய்து வந்த ரிட்ஸெமா, மைக்கேலின் ஆய்வைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தார்.

2011-ஆம் ஆண்டு அவர் ஏ டச்சு காஸ்டவே ஆன் அசென்சன் ஐலாண்ட் (A Dutch Castaway on Ascension Island) என்ற புத்தக்கத்தை வெளியிட்டார். பல ஆண்டுகளுக்கு முன்னதாக புதையுண்டு போன ஹாசென்போஸ்க்கின் வரலாற்றை ஆங்கில வாசகர்களுக்காக அவர் மீட்டெடுத்தார்.

மிகவும் இளம் வயதில் இறந்து போன இரண்டு டச்சு ஆண்களான லீண்டெர்ட் மற்றும் மைக்கேலுக்கு அந்த புத்தகத்தை சமர்ப்பிப்பதாக கூறியிருந்தார். துரதிர்ஷ்டவசமாக ரிட்ஸெமாவும் 2022-ஆம் ஆண்டு புற்றுநோயால் இறந்து போனார்.

Brugmans/Zeemansleven/The Just Vengeance of Heaven Exemplify’d The Just Vengeance of Heaven Exemplify புத்தகத்தில் ஹாசென்போஸ்க்கின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதாக சித்தரிக்கும் படம் இடம் பெற்றிருந்தது. உண்மையில் அவரின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. 'நாங்கள் எப்போதும் இருந்தோம்'

ஹாசென்போஸ்க்கின் கதை பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாகத் தோன்றலாம். ஆனால் அவரின் தண்டனைக்கு பின்னால் இருந்த சக்திகள் இன்னும் உலகில் உள்ளன

"18-ஆம் நூற்றாண்டின் நெதர்லாந்தில் தன்பாலின ஈர்ப்பு மற்றும் ஆண்களுக்கு இடையேயான உறவுகள் என்பது கண்டுகொள்ளாமலோ அல்லது தாங்கிக் கொள்ளக் கூடியதாகவோதான் இருந்தது. ஆனால் ராணுவ தோல்விகளுக்குப் பிறகு, இப்போக்கு 'ஆண்மைக்கு நெருக்கடி' என்று கருதப்பட்டு தண்டனைகள் தீவிரமாக்கப்பட்டன. சமூக சீர்கேடுக்கு தன்பாலின ஈர்ப்பாளர்களை காரணம் காட்டி பலியாடு ஆக்கினார்கள்," என்று விளக்குகிறார் வரலாற்று ஆய்வாளர் எல்வின் ஹாஃப்மென்.

"இன்றும் நம்மை எச்சரிக்கும் ஒன்று அது. நெருக்கடி காலங்களில் ஆண்மையை நிலைநாட்ட பால்புதுமை சமூக மக்களை கடுமையாக தண்டிக்கும் ஆபத்து இருக்கிறது," என்று எச்சரிக்கிறார் அவர்.

ரஷ்யா, உகாண்டா, போலாந்து போன்ற நாடுகளில் பாரம்பரிய மதிப்புகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் பால்புதுமையினருக்கு எதிரான சட்டங்கள் அதிகரித்து வருவது அந்த கால சூழலை எதிரொலிக்கிறது.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து, பால்புதுமையினரின் உரிமைகளை திரும்பப்பெறும் வகையில் சில நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். அவர் கையெழுத்திட்ட இரண்டு உத்தரவுகளில் ஒன்று, பாலின அடையாளம், ஈர்ப்பு நிலை அடிப்படையிலான பாகுபாட்டை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட உத்தரவுகளும் இடம் பெற்றுள்ளன.

ஆண் மற்றும் பெண் என இரண்டை மட்டுமே பாலினங்களாக அங்கீகரிக்கும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார். மேலும் அதனை ஒருவர் மாற்ற இயலாது என்றும் கூறியிருந்தார்.

இது போன்ற சட்டங்கள் வரலாற்றில் இருந்து பால் புதுமையினரை அழிக்க பெரிய பங்களிப்பைக் கொண்டிருக்கிறது.

"நாங்கள் எப்போதும் இங்கே தான் இருந்தோம். 'மதிக்கக்கூடிய' சமூகத்தில் இருந்து பால்புதுமையினரை புறந்தள்ளும் நடவடிக்கைகள் எப்போதும் போல் நிகழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் நாங்கள் தற்போது யார் கண்ணிலும் புலப்படாமல் இருக்கும் மக்கள் அல்ல," என்று சர்வதேச லெஸ்பியன், கே, பைசெக்சுவல், ட்ரான்ஸ் அண்ட் இண்டெர்செக்ஸ் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜூலியா எர்ட் தெரிவிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.