சிங்கப்பூரைச் சேர்ந்த 39 வயதான ஷாவ் சுன் சென் என்ற நபர், கடந்த வருடம் கூகுள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளார். தற்போது வாரத்திற்கு வெறும் 3 மணி நேரம் வேலை செய்வதன் மூலம், தாய்லாந்தில் தன் மனைவியுடன் சேர்ந்து முழுமையான வசதிகளுடன் வாழ்ந்து வருகிறார். நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரில் (NUS) துணை பேராசிரியராக டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகுப்பு நடத்தும் இவர், வாரம் ஒருமுறை சிங்கப்பூருக்குச் சென்று திரும்புகிறார். இதற்காக மாதம் சுமார் 1.3 லட்சம் ரூபாயிலிருந்து 2.6 லட்சம் ரூபாய்வரை சம்பளம் பெறுகிறார். இந்த வருமானம், தாய்லாந்தில் உள்ள குறைந்த வாழ்வுச்செலவுகளுடன், தம் இருவருக்கும் போதுமானதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
2024ல் கூகுளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட போது, தனது வாழ்வியலை மாற்ற முனைந்ததாக சென் கூறினார். கடந்த 14 ஆண்டுகளாக கூகுளில் பணியாற்றிய இவர், தன் வருமானத்தில் பாதியை முதலீடாக மாற்றி, ஒரு ஏழு இலட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சேமித்து வைத்துள்ளார். இதனால், தன்னிடம் வேலை கிடைக்காமல் இருந்தாலும், நீண்ட காலம் சுயநிதியுடன் வாழ முடியும் என்பதை உணர்ந்தார். அதன்பிறகு, NUS-ல் வகுப்புகள் நடத்துவதுடன், YouTube-ல் கல்வி சார்ந்த காணொளிகள் உருவாக்கியும், நேரடி பயிற்சி (coaching) வழங்கியும் வருமானம் ஈட்டத் தொடங்கினார். ஒரு மணி நேர பயிற்சிக்கு ரூ.41,000 வரை வசூலிக்கிறார்.
சிங்கப்பூரில் உள்ளதைவிட தாய்லாந்தில் வாழ்க்கைச் செலவுகள் குறைவாக உள்ளதால், குறைந்த வேலை நேரம் போதுமானது என அவர் கூறினார். “உங்கள் திறன்களை மேம்படுத்தி, ஒரு மணி நேரத்திற்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய நிலைக்கு செல்ல வேண்டும். அத்துடன் குறைந்த செலவுள்ள இடத்தில் வாழத் தெரிந்தால், மிகக் குறைந்த நேரமே வேலை செய்ய வேண்டியதாக இருக்கும்,” என அவர் தெரிவித்துள்ளார். தற்போது, வாரத்திற்கு 4 முதல் 8 மணி நேரம் வரை மட்டுமே வேலை செய்து, வாழ்நாளைப் பற்றிய புரிதலுடன் அமைதியான வாழ்க்கையை நடத்தி வருகிறார்.