நேற்று பிற்பகல் நடந்த மின்னல் தாக்குதல் சம்பவங்களில் கோராபுட் மாவட்டத்தில் 3 பேர், ஜாஜ்பூர் மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் தலா 2 பேர், தேன்கனல் மற்றும் கஜபதி மாவட்டங்களில் தலா 1 உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோராபுட் மாவட்டத்தில் உள்ள பரிதிகுடா கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக அருகில் இருந்த குடிசையில் தஞ்சம் புகுந்தனர். அப்போது குடிசையில் மின்னல் தாக்கியதில் 3 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஜாஜ்பூர் மாவட்டத்தில், தர்மசாலா பகுதியில் தாரே ஹெம்ப்ரம் (15) மற்றும் துக்குலு சத்தார் (12) ஆகிய இரு சிறுவர்கள் வீட்டின் வராண்டாவில் நின்று கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பரிதா கிராமத்தில் ஓம் பிரகாஷ் பிரதான் என்ற 7ம் வகுப்பு மாணவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். பெலகுந்தா பகுதியில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் மாம்பழங்களை சேகரிக்கும் போது 23 வயது பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
முன்னதாக, கோராபுட், கட்டாக், குர்தா, நயாகர், ஜாஜ்பூர், பாலசோர் மற்றும் கஞ்சம் உள்ளிட்ட ஒடிசாவின் பல மாவட்டங்களில் நேற்று பிற்பகலில் இடியுடன் கூடிய மழை, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை மற்றும் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.