சென்னையில் சோகம்... சாலை விபத்தில் தாய், குழந்தை மரணம்!
Dinamaalai May 17, 2025 09:48 PM

சென்னை மாதவரத்தில் இருந்து அண்ணாநகர் நோக்கி மண் லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, பாடி மேம்பாலத்தில் ஏற முயன்ற போது, இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியதில், தாயும், குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். 

சரவணன் என்பவர் தனது மனைவி பிரியா மற்றும் குழந்தை கரோலினுடன் சென்ற நிலையில், இந்த விபத்தில் லாரி மோதி, பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள், விபத்தில் படுகாயமடைந்த சரவணனையும், குழந்தை கரோலினையும் மீட்டு கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை கரோலின், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

இதற்கிடையே, மாதாவாரத்தில் இருந்து அண்ணாநகர் செல்லும் பாடி மேம்பாலம் அருகே வாகன ஓட்டிகள் ஒன்று சேர்ந்து கனரக வாகனங்களை வழி மறித்தனர். அப்போது அவர்கள், 'நகரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லாத நிலையில் எப்படி வருகிறது' என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாதவரத்தில் இருந்து அண்ணாநகர் நோக்கி செல்லக்கூடிய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினரிடமும் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பிரியாவின் சடலத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.